இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம் ஸ்கோடா நிறுவனம் 4,604 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஸ்கோடா நிறுவனம் வெறும் 716 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 543 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஸ்கோடா நிறுவனம் அசத்தியுள்ளது.

இந்த பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய இரண்டு கார்கள்தான் முக்கியமான காரணம். இதில், ஸ்கோடா குஷாக் கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் ஸ்கோடா ஸ்லாவியா கார் நடப்பாண்டுதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்கோடா ஸ்லாவியா காரின் 1.0 லிட்டர் இன்ஜின் மாடல் நடப்பாண்டு பிப்ரவரி மாதமும், 1.5 லிட்டர் இன்ஜின் மாடல் நடப்பாண்டு மார்ச் மாதமும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. இதில், ஸ்கோடா குஷாக் காரானது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்திலும், ஸ்கோடா ஸ்லாவியா காரானது மிட்-சைஸ் செடான் ரகத்திலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் குஷாக் மற்றும் ஸ்லாவியா ஆகிய கார்களின் வசதிகளின் பட்டியலை திருத்தியமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 11.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 19.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மறுபக்கம் ஸ்கோடா ஸ்லாவியா மிட்-சைஸ் செடான் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 18.39 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இதில் இன்ஜின் தேர்வுகள் முக்கியமானது.

ஆம், ஸ்கோடா குஷாக் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய 2 கார்களிலும் ஒரே மாதிரியான இன்ஜின் தேர்வுகள்தான் வழங்கப்பட்டுள்ளன. 2 டர்போ-பெட்ரோல் இன்ஜின்களை இந்த கார்கள் பெற்றுள்ளன. இதில், 1.0 லிட்டர், மூன்று-சிலிண்டர், டிஎஸ்ஐ யூனிட் ஒன்றாகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 115 ஹெச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

இதுதவிர பெரிய 1.5 லிட்டர், நான்கு-சிலிண்டர் டிஎஸ்ஐ இன்ஜின் தேர்வையும் இந்த 2 கார்களும் பெற்றுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 ஹெச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்திய சந்தையில் கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகியவை ஸ்கோடா குஷாக் மிட்-சைஸ் எஸ்யூவி காரின் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன.

மறுபக்கம் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் ஆகியவை ஸ்கோடா ஸ்லாவியா காரின் முக்கியமான போட்டியாளர்களாக உள்ளன. அத்துடன் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும், ஸ்கோடா ஸ்லாவியா காரின் மிக முக்கியமான போட்டியாளர்களில் ஒன்றாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா நிறுவனத்தை உள்ளடக்கிய ஃபோக்ஸ்வேகன் குழுமத்திடம் இருந்து சமீபத்தில் வெளிவந்த ஸ்கோடா குஷாக், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய 3 கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வெற்றி நடையை, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மூலம் தொடர்வதற்கு ஃபோக்ஸ்வேகன் குழுமம் திட்டமிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. விலை மட்டும்தான் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் ஜூன் 9ம் தேதி ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அப்போது அதிகாரப்பூர்வமாக விலை அறிவிக்கப்படும். இதற்காக வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர்.

ஸ்கோடா குஷாக், ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் டைகுன் மட்டுமின்றி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரையும் நாங்கள் ஓட்டி பார்த்து விட்டோம். ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனங்களுக்கே உரிய வகையில் அவை அனைத்தும் மிகவும் பிரீமியமாக இருக்கின்றன. அத்துடன் செயல்திறனிலும் இந்த கார்கள் அமர்க்களப்படுத்துகின்றன.