மோகன்லாலின் பிறந்த நாளையொட்டி அவர் நடிக்கும் ‘அலோன்’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
‘ட்வெல்த் மேன்’ படத்துக்குப் பிறகு மோகன்லால் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘அலோன்’. ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பூஜையுடன் படத்தின் பணிகள் தொடங்கியது. வெறும் 18 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டது படக்குழு. சரியாகத் திட்டமிட்டு படமாக்கினால் மட்டுமே இது சாத்தியமானது என்று இயக்குநர் ஷாஜி கைலாஷ் தெரிவித்துள்ளார்.
ஆசிர்வாத் சினிமாஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதையை ராஜேஷ் ஜெயராம் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜம், இசையமைப்பாளராக ஜெக்ஸ் பிஜாய், எடிட்டராக டான் மேக்ஸ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்நிலையில், மோகன்லால் பிறந்த நாளான இன்று ‘அலோன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வெள்ளை நிற உடையில் தோன்றும் மோகன்லால் “உண்மையான ஹீரோக்கள் எப்போதும் தனியாக இருக்கிறார்கள்” என்ற வசனம் பேச டீசர் முடிவடைகிறது. படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.