கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 22 மே, 2022 05:04 AM
வெளியிடப்பட்டது: 22 மே 2022 05:04 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 22 மே 2022 05:04 AM

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படத்துக்காக சிறுமலையில் பிரம்மாண்ட கிராமம் செட் அமைக்கப்பட்டுள்ளது.
‘அசுரன்’ திரைப்படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இதில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடெய்ன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ கதையை தழுவி இப்படம் உருவாக்கப்படுகிறது.
இதன் 4-வது கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல் அடுத்த சிறுமலையில் நடந்து வருகிறது. இதற்காக பிரம்மாண்டமாக கிராமம் செட் அமைத்துள்ளனர். கலை இயக்குநர் ஜாக்கி, நிஜ கிராமம் போலவே இந்த அரங்கத்தை அமைத்துள்ளார். இங்கு விஜய் சேதுபதி பங்கேற்ற சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது சூரி உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இதற்காக படக்குழுவை சேர்ந்த 450 பேர் சிறுமலை பகுதியில் தங்கியுள்ளனர். வனப்பகுதி என்பதால் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் வசதிக்கும் படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.