சென்னை: பிளஸ் 2, 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பணிகளை ஆசிரியர்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மே 5-ல் தொடங்கி 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த தேர்வை சுமார் 26 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
இதையடுத்து பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 83 முகாம்களில் சுமார் 76,000 ஆசிரியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி பாடம் மற்றும் மொழிவாரியாக திருத்தம் செய்யப்படுகிறது. தினமும் குறைந்தபட்சம் 24 விடைத்தாள்கள் வீதம் திருத்தி முடிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்துதல் ஜூன் 8-ம் தேதியுடன் நிறைவுபெறும்.
வெளிநபர் அனுமதி கூடாது
அதன்பின் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளை முடித்து ஜூன் 23-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மேலும், முகாம்களுக்கு வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது. விதிகளை மீறி தவறுகள் நடைபெற்றால் சார்ந்த முகாம் அலுவலரே பொறுப்பேற்க நேரிடும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகம் முழுவதும் 87 முகாம்களில் இன்று (ஜூன் 2) தொடங்கி ஜூன் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ள 88,000 ஆசிரியர்கள் தினமும் 30 விடைத்தாள்கள் வீதம் திருத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜூன் 17-ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிட்டு உள்ளதால் அதற்குள் அனைத்துவிதமான பணிகளையும் விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகாம்களுக்கு வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது. விதிகளை மீறி தவறுகள் நடைபெற்றால் சார்ந்த முகாம் அலுவலரே பொறுப்பேற்க நேரிடும்.