ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப்பிறகு ‘ஏகே61’ படத்தில் மீண்டும் அஜித்துடன் மகாநதி சங்கர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் ‘ஏகே61’ என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் படப்பிடிப்பு தொடங்கி ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
இதனிடையே, படத்தில் அஜித் தவிர மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், பாலிவுட் நடிகை தபு அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று தகவல் வெளியானது. இப்போது தபுவுக்கு பதில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டது. இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக மற்றொரு தகவலும் வெளியாகியிருக்கிறது. அது, 20 ஆண்டுகளுக்குப்பிறகு மகாநதி சங்கர் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது தான் அந்த தகவல்.
இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில் முதன்முறையாக அஜித்தை ‘தல’ என்று அழைத்தவர் மகாநதி சங்கர் தான். அதைத் தொடர்ந்துதான் அவரது ரசிகர்கள் அஜித்தை ‘தல’ என்று அடைமொழியிட்ட அழைக்கத்தொடங்கினர். இவர்கள் இருவரும் கடைசியா ‘தீனா’ படத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து தற்போது மீண்டும் அஜித்துடன், மகாநதி சங்கர் இணைய உள்ள தகவல் அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘ஏகே61’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மகாநதி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘ஏகே61’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் முடிந்துள்ளதாகவும், தற்போது அஜித் ஒரு சிறிய இடைவெளியை எடுத்துள்ளதாகவும், மீண்டும் மே 25-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.