கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 03 ஜூன், 2022 07:28 AM
வெளியிடப்பட்டது: 03 ஜூன் 2022 07:28 AM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 03 ஜூன் 2022 07:28 AM

ஸ்டாவஞ்சர்: இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், நார்வே செஸ் போட்டியில் தொடர்ச்சியாக 2-வது வெற்றியைப் பதிவு செய்தார்.
நார்வே நாட்டின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிக்கல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. முன்னணி வீரர்கள் 10 பேர் கலந்து கொண்ட இந்தத் தொடரின் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த், பிரான்ஸின் மாக்சிம் வச்சியர்-லாக்ரேவை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது சுற்றில், பல்கேரியாவின் வெசெலின் டோபலோவை எதிர்கொண்டார் விஸ்வநாதன் ஆனந்த். இந்த ஆட்டத்தில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் 36-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். அடுத்தடுத்த இரு வெற்றிகளின் மூலம் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். அமெரிக்காவின் வெஸ்ஸி சோ 4.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். நெதர்லாந்தின் அனிஷ் கிரி 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் 2.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.