அக்ஷய் குமாரின் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ படத்திற்கு ஓமன், குவைத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னர் சாம்ராட் பிருத்விராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘சாம்ராட் பிருத்விராஜ்’. சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மனுஷி சில்லர் அவரது மனைவியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சஞ்சய் தத், அசுவதோஷ் ராணா, லலித் திவாரி உட்பட ஏராளமானோர் இதில் நடித்துள்ளனர்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ‘சாம்ராட் பிருத்விராஜ்’ படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நாளை (ஜூன் 3) வெளியாகிறது.
இந்நிலையில், இந்த படம் ஓமன் மற்றும் குவைத்தில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘குருப்’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘எப் ஐ ஆர்’ படங்கள் குவைத்தில் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.