உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய அரும்புலியூர் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கினார். வட்டார வேளாண் துணை இயக்குனர் சிவக்குமார், உதவி இயக்குனர் அன்புச்செல்வி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராயப்பன் வரவேற்றார். இதில், பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்காக, இயற்கையாக கிடைக்கும் பூச்சிவிரட்டி, பசுந்தாள் உரங்கள், மீன் கழிவுகள் உள்ளிட்டவைகளை கொண்டு இயற்கையான முறையில் பயிரிடுதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.