வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு தகுந்தபடி உணவு வகைகளை சிறிதளவு மாற்றிக்கொண்டால் பெரும் பாதிப்பிலிருந்து எளிதாக தப்பிக்கலாம் என சித்த மருத்துவர் பாஸ்கரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. அக்னி நட்சத்திரத்தில் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த மகிழ்ச்சி தொடரவில்லை. அடுத்த சில நாட்களில் மீண்டும் வெயில் சுட்டெரித்தது. வழக்கம் போல் 100 டிகிரி கடந்து வெயில் வாட்டியது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கோடையின் வெப்ப தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மருத்துவத் துறையினர். வேலூர் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக சதத்தை தாண்டி சுட்டெரிக்கும் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தற் போது அக்னி வெயில் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி பொதுமக்களை வாட்டி எடுத்தது. அக்னி வெயில் முடிந்தும் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வேலூர் புற்று மகரிஷி சித்த மருத்துவ சேவை மையத்தின் தலைமை மருத்துவர் பாஸ்கரன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் அவர் கூறும்போது, ”கோடை காலம் தொடங்கி விட்டால் வெயில் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும்.
வெயில் காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். இதனால், உடல் சோர்வு ஏற்படும். மேலும், உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரணம் மற்றும் சரும பிரச்சனைகள் இயல்பாகவே வரும். இதைத் தடுக்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதிக வியர்வை வெளியேறு வதால், உடலில் உள்ள எலெக்ட் ரோலைட்ஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.
இதைத் தவிர்க்க இளநீர், மோர் பருகலாம். இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சை பழச்சாறு எடுத்துக்கொண்டால் ‘வைட்டமின்-சி’ உடல் சத்துக்கு பலத்தை கொடுக்கும். இது மட்டுமின்றி புதினா, துளசிச்சாறு குடிக்கும்போது, வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் பாதை நோய் தொற்றை (சிறுநீர் பாதை தொற்று) கட்டுக்குள் கொண்டு வர உதவும்.
தினசரி கூழ் குடிக்கலாம். மேலும், நீர் மோர் அருந்தலாம். மோரில் ப்ரோபயாடிக்ஸ் உள்ள தால் உடல் வெப்பநிலையை சமமாக வைத்துக்கொள்ளும். நன்னாரி சர்பத் அருந்தலாம்.
சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் முதியவர்கள் உச்சி வெயில் நேரத்தில் வெளியே செல்ல வேண்டும்.
கோடை வெயில் காலங்களில் தான் அம்மை போன்ற நோய்கள் வர அதிக வாய்ப்புள்ளது. இதனால், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மாமிசம் தவிர்த்து, காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக புடலங்காய், பீர்க்கங்காய் உள்ளிட்டவைகளை சாப்பிடவேண்டும். நாட்டு தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு உள்ளிட்டவையும் எடுத்துக்கொள் ளலாம். இரவில் விரைவாக செறிமானம் ஆகும் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
நன்னாரி மணப்பாகு
நன்னாரி மணப்பாகுவை நீர்சுருக்கு, வெட்டை சூடு உள்ளவர்களும் பருகலாம். பூமியில் சூரிய வெப்பம் அதி கரிப்பதால் இயல்பாகவே மனித உடல்களிலும் வெப்பம் அதிகரிக்கும். இதனால், உடலில் உள்ள ரத்தத்திலும் வெப்பம் அதிகரிப்பதால் சிலருக்கு பித்த நாடியில் பாதிப்புகள் ஏற்படும்.
இந்த பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி கோபப்படுவார்கள் (ஹைபர் டென்ஷன்). இவர்கள், நன்னாரி மணப்பாகுவை எடுத்துக் கொள்வதால் பித்த நாடி சீராகி உடல் வெப்பமயமாதலை தவிர்க்கலாம். 5 மி.லி. நன்னாரி மணப்பாகுவை 15 மி.லி. தண்ணீரில் கலந்து பருகும் போது நீர்சுருக்கு சரியாகும்.
கோடை வெயில் காலங்களில் அதிக தாகம் எடுப்பவர்கள் நன்னாரி மணப்பாகுவை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், உடல் குளிர்ச்சியா வதுடன் தேவையான நீர்ச்சத்தும் கிடைக்கும். இதன் மூலம் உடல் நலமும் சிந்தனை வளமும் தெளிவாகும். நன்னாரி மணப் பாகுவை தினசரி 2 முதல் 3 முறை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும், நம் வீட்டிலேயே பானகம் தயாரித்து அருந்துவதும் சிறப்பானதாகும். இது போன்ற வெயிலுக்கு ஏற்ற உணவு வகைகள், அனுபவ அறிவு மிக்க பாட்டிமார்களின் வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோ சனைகள் படி கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றினால், கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்கலாம்” என்றார்.