இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ மோட்டார்ராடும் டிவிஎஸ் நிறுவனமும் கூட்டணியில் இருப்பது தெரிந்த விஷயமே. இதன் மூலமாக இவை இரண்டும் தங்களது வடிவமைப்பு யுக்திகளை பரிமாறி கொள்கின்றன. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள தனது ஓசூர் தொழிற்சாலையில்தான் டிவிஎஸ் மோட்டார் பிஎம்டபிள்யூவின் ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் மோட்டார்சைக்கிள்களை தயாரித்து வருகிறது.

இந்த வகையில் புதியதாக டிவிஎஸ் ஆர்ஆர்310 பைக் அடிப்படையில் பிஎம்டபிள்யூ பிராண்டில் ஜி310 ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது. மற்ற இரு 310சிசி பிஎம்டபிள்யூ பைக்குகளை போன்று புதிய பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் பைக்கும் ஓசூர் தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது.

சமீபத்தில்தான், டிவிஎஸ் ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிள் புதிய தோற்றத்திற்கு அப்டேட் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் மாடல் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதன் அறிமுகத்தையே தற்போது பிஎம்டபிள்யூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம்.
இந்த வீடியோவில் டிவிஎஸ் ஆர்ஆர்310 மாடலின் அதே மாட்டு கொம்பு ஸ்டைலிலான பைக்கின் பின்பக்க டெயில்லேம்ப்பை காணலாம். அதற்கு கீழாக நம்பர் ப்ளேட்டில் ‘ஆர்ஆர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. சற்று தொலைவாக பின்பக்கத்தை காட்டும் ஹேண்டில்பார் கண்ணாடிகள் புலப்படுகின்றன. இவையும் ஆர்ஆர்310-ஐயே ஒத்து காணப்படுகின்றன. இவை தவிர்த்து பைக்கின் வேறெந்த பாகத்தையும் காண முடியவில்லை.

எப்படியிருந்தாலும், டிவிஎஸ் மாடலில் இருந்து சற்று வேறுப்படும் விதமாகவே புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர்ஆர் பைக் இருக்கும் என்பது உறுதி. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய பிஎம்டபிள்யூ ஜி 310ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் 2022 ஜீலை 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம். இவ்வளவுஏன், ஜி 310ஆர்ஆர் பெயரும் எங்களது யூகிப்பே அன்றி, அதிகாரப்பூர்வ பெயர் மாறக்கூடும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், டிவிஎஸ் ஆர்ஆர்310 பைக்கின் 313சிசி என்ஜின் அப்படியே தொடரப்படலாம்.

அதிகப்பட்சமாக 9,700 ஆர்பிஎம்-இல் 34 பிஎச்பி மற்றும் 7,700 ஆர்பிஎம்-இல் 27.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. என்ஜின் மட்டுமின்றி, ப்ளுடூத் இணைப்பு, ரைடு-பை-வயர் மற்றும் அர்பன்; டிராக்; ஸ்போர்ட் & மழை என்கிற 4 ரைடிங் மோட்களையும் இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கில் எதிர்பார்க்கலாம்.

டிவிஎஸ் நிறுவனம் அதன் ஆர்ஆர்310 மோட்டார்சைக்கிளுக்கு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன் உள்ளிட்டவை அடங்கிய கஸ்டமைஸ்ட் தொகுப்பை பிடிஒ என்கிற பெயரில் வழங்குகிறது. இத்தகைய கஸ்டமைஸ்ட் தொகுப்பை தனது பைக்கிற்கு பிஎம்டபிள்யூ வழங்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. இவ்வாறான சவுகரிய தேர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க விரும்பும் நிறுவனம் பிஎம்டபிள்யூ என்பதால், வழங்கவும் வாய்ப்புள்ளது.