இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்பதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசே எலெக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்தி வருகிறது. மாநில அரசுகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்த சூழலில், தமிழக அரசு தற்போது மிகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக தற்போது 25 எலெக்ட்ரிக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன. தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், இந்த புதிய எலெக்ட்ரிக் கார்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படங்களை வைத்து பார்க்கையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டிருப்பவை டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார்கள் (Tata Tigor EV) என்பது நமக்கு தெரிய வருகிறது. இந்திய சந்தையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் மிகவும் பிரபலமாக உள்ளது. இது செடான் ரகத்தை சேர்ந்த எலெக்ட்ரிக் கார் ஆகும்.

டாடா நிறுவனம் டிகோர் காரை எலெக்ட்ரிக் வடிவத்தில் மட்டுமல்லாது, ஐசி இன்ஜின் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக ரேஞ்ச் ஆகியவற்றை வழங்க கூடியது.

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 26 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 306 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 306 கிலோ மீட்டர்கள் என்பது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். அதே நேரத்தில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும் (ஸ்போர்ட்ஸ் மோடு).

ஜிப்ட்ரான் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளதால், டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கும் சப்போர்ட் செய்யும். டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் சார்ஜ் செய்தால், பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். ஆனால் 15 ஆம்பியர் ஏசி சார்ஜர் பயன்படுத்தினால், இதை செய்வதற்கு 8.5 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.64 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு விலை இன்னும் சற்று கூடுதலாக வரும்.

இந்த சூழலில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக தற்போது வழங்கப்பட்டுள்ள 25 எலெக்ட்ரிக் கார்கள் 3.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவது, பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாது, நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்குமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

இதன் புதிய மாடலை, டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஸ்டாண்டர்டு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விட, இந்த புதிய மாடலில் பெரிய பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே ஸ்டாண்டர்டு மாடலை விட அதிக ரேஞ்ச் கிடைக்கும் என்பது முக்கியமான சிறப்பம்சம் ஆகும்.