போட்டித்தேர்வு தொடர் 05: கஞ்சனைப் போல காலத்தை செலவழி! | Competitive exams


போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது 3 முக்கிய விஷயங்கள் மட்டுமே.

1. நேரம்

2. பாடக் குறிப்புகள்

3. நடக்க உள்ள தேர்வில், பழைய வினாத்தாள்களை பகுப்பாய்வு செய்து, ஒவ்வொரு பிரிவில் இருந்தும் சராசரியாக எத்தனை கேள்விகள் கேட்கப்படுகின்றன என்ற தெளிவு.

முதலில் ‘நேரம்’ என்பதில் தெளிவான வரையறைக்கு வரவேண்டும். தேர்வுக்கு தயாராவது என தீர்மானித்த அந்த விநாடியில் இருந்து தேர்வு நாள் வரை எத்தனை மாதங்கள், எத்தனை நாட்கள், எத்தனை மணிநேரங்கள் நம் கையில் இருக்கின்றன என்கிற கணக்கில் ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும். ஏனெனில் நம்மால் நேரத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. ஆனால் நமது பயணத்தை குறைக்கவோ, கூட்டவோ நேரத்தால் முடியும். எனவே, நேரம் என்பது மிக முக்கியம். நேரம் பற்றிய திட்டமிடல் சரியாக அமைந்தால், நாம் படிக்க வேண்டிய பகுதிகளை எத்தனை நாட்களில் முடிக்கலாம் என்ற விவரத்துக்கு வந்துவிடலாம். ஒரு நாளில் நேரத் திட்டத்தை வகுத்துவிட்டால், எஞ்சியுள்ள அவகாசத்தில் நேரத்தை எப்படி பயன்படுத்துவது என்ற திட்டம் கைவசம் ஆகிவிடும்.

2-வது கூறு, பாடக் குறிப்புகள். ‘‘நான் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராக தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்டத்தின் பாடங்களை படித்தால் போதுமா? யுபிஎஸ்சி தேர்வுக்கு என்சிஇஆர்டி பாடங்களை மட்டும் படித்தால் போதுமா? அல்லது, இரண்டு தேர்வுக்கும் இரண்டையும் சேர்த்துப் படிக்க வேண்டுமா? எவ்வளவுதான் படிப்பது? எந்த மெட்டீரியல் படிப்பது?’’ என்று பலரும் கேட்பார்கள்.

இரண்டு தேர்வுகளுக்கும் அதிகாரப்பூர்வமாக தரப்பட்ட பாடத் திட்டத்தின் சிலபஸ் கூறுகள் எங்கெல்லாம் துல்லியமாக இருக்கிறதோ, அதையெல்லாம் நிச்சயம் படிக்க வேண்டும்.

3-வது கூறு, பழைய தேர்வு வினாத்தாள் பகுப்பாய்வு. யுபிஎஸ்சி தேர்வுகள் சரியான கால இடைவெளியில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் சில ஆண்டுகளில் நீண்ட இடைவெளி விடப்பட்டாலும், தற்போது யுபிஎஸ்சி தேர்வுபோலவே ஆண்டு கால அட்டவணை வெளியிடப்படுகிறது. ஆனாலும், பழைய வினாத்தாள்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. அதில் இருந்து வினா பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும்.

இணையதளங்களில் தகவல்கள்

இப்போதெல்லாம் எப்போது தேர்வு வரும், எப்படி விண்ணப்பிப்பது என்று யாரையும் கேட்கவோ, யார் உதவியையும் எதிர்பார்ப்பதோ அவசியம் இல்லை. மத்திய, மாநில பணிகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் www.upsc.gov.in மற்றும் www.tnpsc.gov.in ஆகிய இணையதளங்கள் வாரி வழங்குகின்றன. அறிவிக்கை வெளியாகும் நாள், விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள், முடியும் நாள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் நாள், முதல்நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என அனைத்து தேர்வுகளும் நடக்கும் நாட்கள் விவரம், தேர்வு முடிவு வெளியாகும் நாள், தேர்வு பற்றிய மற்ற விவரங்கள் மட்டுமின்றி, மாதிரி தேர்வு, பழைய வினாத்தாள்கள் ஆகியவையும் காணக் கிடைக்கின்றன.

‘‘நல்ல காலம் பொறந்தாச்சு’’, ‘‘நல்ல நேரம் வந்தாச்சு’’ என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். நல்ல காலம், நல்ல நேரம் என்பதெல்லாம் புதிதாக பிறப்பதில்லை. நமக்கு இருக்கும் நேரத்தை திட்டமிட்டு, நொடி நொடியாய் செலவழித்து விழிப்புணர்வோடு வாழ்பவர்களுக்கு அந்த நேரம் நல்ல நேரமாக மாறுகிறது. நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

தேர்வுக்கு முன்பு ஒரு தேர்வருக்கு 30 நாட்கள் படிக்க அவகாசம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு நாளுக்கு 10 மணி நேரம் படிக்கத் திட்டமிட்டால், அவருக்கு 300 மணி நேரம் கைவசம் இருக்கும். அவர் படிக்க வேண்டிய அடிப்படை பாடங்கள் 5 என்று வைத்துக்கொண்டால், ஒரு பாடத்துக்கு அவர் ஒதுக்க வேண்டிய நேரம் 60 மணி. ஒருவேளை அந்த பாடத்தில் 10 தலைப்புகள் இருந்தால், ஒரு தலைப்பை படித்து முடிக்க 6 மணி நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அந்த தலைப்பில் இருந்து பழைய வினாக்கள் எப்படி கேட்கப்படுகின்றன? ஏன் இப்படி கேட்கப்பட்டது? எந்த தலைப்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது? என்றெல்லாம் வினாக்களை எழுப்பி, அதற்கான விடைகளை அந்த 6 மணி நேரத்தில் கண்டறிய வேண்டும்.

ஒவ்வொரு 6 மணி நேரத்தையும் யார் ஒருவர் சரியாக திட்டமிட்டு, சேதாரமின்றி செலவழிக்க கற்றுக்கொள்கிறார்களோ, அவர் அரசு பணியை குறிபார்த்து, இலக்கை எய்தி, பதவியை பெறுகிறார்.

அதிக நேரம் செலவிட்டு படிக்கும் பலர் தேர்ச்சி பெறுவது இல்லை. காரணம், பயனுள்ள நேரம் முழுவதும் அவர்கள் படித்தது பயனற்ற தகவல்களாக இருக்கும். தேர்வுக்கு தேவையில்லாத, தேர்வில் கேட்பதற்கு வாய்ப்பே இல்லாத செய்திகளை மணிக்கணக்கில் அமர்ந்து படித்திருப்பார்கள்.

அவர்கள் காலத்தை விரயம் ஆக்கியவர்கள், இவர்கள் கவனக் குறிப்போடு பயணம் செய்ய மறந்தவர்கள்.

நேரம் என்பது மணித்துளிகள் என்ற தங்க காகிதங்களால் கட்டப்பட்ட கஜானா. அந்த கஜானாவில் இருந்து தங்க காசுகளை துளித்துளியாக செலவழிக்க வேண்டும். ஒரு கஞ்சனைப் போல, காலத்தை எண்ணி எண்ணி யார் செலவழிக்கிறார்களோ, அவர்களது காலமே பொற்காலம்!

(அடுத்த பகுதி நாளை வரும்)

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 04 – பொது அறிவு பாடங்களுக்கு தயாராவது எப்படி?





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube