அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள்: டெல்லி அரசு புதிய அறிவிப்பு | delhi government to set up free hobby hubs for government school students


புதுடெல்லி: டெல்லியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பொழுதுபோக்கு மையங்களை தொடங்கவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் 2015-ல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்வி மற்றும் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. குறிப்பாக, பள்ளிக் கல்வியில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள், மாநில மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வகையில், தற்போது அரசுப் பள்ளிகளில் பொழுதுபோக்கு மையங்களை தொடங்கவுள்ளதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டை விட தற்போது டெல்லியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. டெல்லி அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பிலும் கற்பித்தலிலும் கூடுதல் கவனம் செலுத்தி வரும் அம்மாநில அரசு, தற்போது இலவச பொழுதுபோக்கு மையங்களையும் அரசுப் பள்ளிகளில் தொடங்கவுள்ளது. மையங்களின் நோக்கம், பள்ளி மாணவர்களிடையே பாடத்தை தவிர்த்து மற்ற செயல்பாடுகளை ஊக்குவித்து பயிற்சியளிப்பதாகும். இதற்காக, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் போன்ற தனியார் நிறுவனங்களைப் பயன்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு கல்வி இயக்குநரகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது அதில், ‘தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அகாடமிகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள் இந்தப் பொழுதுபோக்கு மையங்களில் பங்கேற்று மாணவர்களின் செயல்பாடுகளை மேம்படுத்த தங்கள் விண்ணப்பங்களை மே 6, 2022 வரை டெல்லி கல்வி இயக்குநரகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்’ என தெரிவித்துள்ளது.

மேலும், ‘இந்தப் பொழுதுபோக்கு மையங்களில் நடனம், ஓவியம் வரைதல், பாட்டு வகுப்பு என மாணவர்களுக்கு எதில் ஆர்வமோ அதைத் தேர்ந்தெடுத்து கற்பிக்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்பு நேரத்தை முடித்துவிட்டு இதில் பங்கேற்கலாம். இந்தப் பொழுதுபோக்கு மையங்களில் அவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும். தனியார் பள்ளி மாணவர்கள் இதில் சேர கட்டணம் செலுத்த வேண்டும்’ என டெல்லி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்தப் புதிய அறிவிப்பு, பெற்றோர் – மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube