பாடகர் கிரிஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கின்றது. கேகே என ரசிகர்களாலும், திரையுலகாலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் இவர். இதுவரை 3,500க்கும் அதிகமான பாடல்களை கேகே பாடியிருக்கின்றார். இவர் 1996ம் ஆண்டு முதலே பாடல்களைப் பாடி வருகின்றார்.

இவரின் பாடல்களுக்கு 80ஸ், 90ஸ் மட்டுமின்றி 2கே கிட்ஸ்கள் சிலரும் அடிமை ஆவார். தமிழில் இவர் 60-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கின்றார். இவர் பாடிய பாடல்கள் பல ஹிட்டானவை ஆகும். உயிரின் உயிரே (காக்க காக்க), அப்படி போடு (கில்லி) போன்ற பல ஹிட் பாடல்களை கேகே பாடியுள்ளார். இத்தகைய ஓர் முன்னணி பாடகரே இன்று நம்முடன் இல்லை என்கிற சூழல் உருவாகியுள்ளது.

அண்மையில் தனியாார் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக கொல்கத்தா சென்ற கேகே, உயிரற்ற உடலாகவே திரும்பி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே அவர் உடல் நல குறைவுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. மிகுந்த சோர்வுடன் காணப்பட்ட அவரை சிலர் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர்.

ஆனால், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கேகே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரின் இறப்பிற்கு மாரடைப்பே காரணம் என கூறப்படுகின்றது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

கேகே ஓர் மிக சிறந்த பாடகர் மட்டுமல்ல. அவர் ஓர் மிக சிறந்த கார் பிரியருமாகவும் இருந்திருக்கின்றார். இதற்கு அவரிடம் பயன்பாட்டில் இருந்த விலையுயர்ந்த ஆடம்பர கார்களே சான்று. அப்படி அவர் என்ன மாதிரியான கார்களை எல்லாம் பயன்படுத்தி வந்தார் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஆடி ஆர்எஸ்5 (Audi RS5):
கேகே பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த கார் மாடல்களில் ஆடி ஆர்எஸ்5 மாடலும் ஒன்று. இக்காரை மிக சமீபத்திலயே அவர் வாங்கினார். இந்த மாடலின் உயர்நிலை வேரியண்டான ஸ்போர்ட் பேக் (Audi RS5 Sportback) தேர்வையே அவர் வைத்திருந்தார். அது ஸ்மேஷ் மெட்டாலிக் டேங்கோ சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இது உயர்நிலை வேரியண்ட் என்பதால் அதில் சிறப்பு வசதிகளும் ஏராளம். கவர்ச்சியான தோற்றத்திற்கும் சற்றும் குறைவில்லாத காராக அது காட்சியளிக்கின்றது. இதுமாதிரியான சூப்பரான கார்கள் சிலவற்றரை அவர் வைத்திருந்த காரணத்தினால்தான், கேகே-வை மிக சிறந்த கார்கள் டேஸ்ட் கொண்டவர் என கூறுகின்றனர்.

அவர் ஆடி ஆர்எஸ் 5 காரை டெலிவரி எடுத்த புகைப்படங்களை தற்போதும் இணையத்தில் காண முடியும். ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஆடி ஆர்8 காரை ரீபிளேஸ் செய்யும் வகையிலேயே கேகே ஆர்எஸ் 5 மாடலை வாங்கினார். முன்னதாக பயன்படுத்தி வந்த ஆடி ஆர்8 சூப்பர் காரின் மதிப்பு ரூ. 2.72 கோடிக்கும் அதிகம் ஆகும்.

அதே நேரத்தில் அது ஓர் இரு இருக்கைகள் மட்டுமே கொண்ட சூப்பர் காராகும். ஆனால், ஆர்எஸ் 5 இரண்டு வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட சூப்பர் கார் மாடலாகும். இதன் விலை ரூ. 1.07 கோடிகள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் 2.9 லிட்டர் பை-டர்போ வி6 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்த எஞ்ஜின் 444 பிஎச்பி மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது. இந்த மோட்டார் 8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷனில் இயங்குகின்றது. மேலும், வெறும் 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் கொண்டிருக்கின்றது.

ஜீப் கிராண்ட் செரோக்கி (Jeep Grand Cherokee)
ஆடி ஆர்எஸ்5 சூப்பர் காரை தொடர்ந்து ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடலையும் கேகே தன் வசம் வைத்திருந்தார். இதுவும் அதிக வசதிகள் நிறைந்த சொகுசு கார் மாடலாகும். தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு இந்த காரையே கேகே பயன்படுத்தியிருக்கின்றார். இந்த காரின் மதிப்பும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமானதாக காட்சியளிக்கின்றது.

மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-கிளாஸ் (Mercedes-Benz A-Class)
ஜீப் கிராண்ட் செரோக்கி சொகுசு கார் மாடலைத் தொடர்ந்து பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸின் ஏ-கிளாஸ் காரையும் கேகே பயன்படுத்தியிருக்கின்றார். இது ஓர் பிரீமியம் மற்றும் லக்சூரி அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடலாகும். பார்க்க சற்று சிறியதாக இக்கார் தென்படும். இருப்பினும், லக்சூரி அம்சங்களுக்கு சற்றும் குறைவில்லாத காராக அது உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய ஓர் சூப்பரான காரையே கேகே தன் வசம் வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.
குறிப்பு: படங்கள் சில உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.