வாலாஜாபாத் : வாலாஜாபாத் அருகே மாவட்ட அளவில் வாள்வீச்சு போட்டி நடந்தது. இதில் வாலாஜபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட வாள்வீச்சு கழகம் சார்பில் வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டிகள் நடந்தன. இதில், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 20 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் அகத்திய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒரு தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்கள் பெற்ற சாதனை படைத்தனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அஜய்குமார், தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இப்போட்டியில் வெற்றி பெற்ற 11 மாணவர்களும் அடுத்த மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.