UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருடாவருடம் 24 பணிகளுக்கான தேர்வுகளை நடத்திவருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடத்திய தேர்வுகளின் முடிவுகள் ஆன்லைனில் மே 30 அன்று வெளியிடப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பெண்கள் பிடித்திருந்தனர்.
முதலிடத்தை ஸ்ரீருதி ஷர்மா, இரண்டாவது இடத்தை அங்கீதா அகர்வால், மூன்றாவது இடத்தை காமினி சிங்லா ஆகியோர் பெற்றனர். தமிழகத்தில் இருந்து கோவையைச் சேர்ந்த மாணவி ஸ்வாதி ஸ்ரீ இந்திய அளவில் 45வது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்திருந்தார். இவர்களைப் போலவே யுபிஎஸ்சி தேர்வில் 177வது இடம் பிடித்த ஷிவாங்கி கோயல் என்பவரும் மக்களின் கவனம் ஈர்த்துள்ளார்.
ஹபூரின் பில்குவா பகுதியில் வாழ்பவர் ராஜேஷ் கோயல். இவர் ஒரு தொழிலதிபர், மனைவி இல்லத்தரசியாக உள்ளார். இவர்களது மகள் தான் ஷிவாங்கி கோயல். சிறு வயதில் இருந்தே ஆட்சியர் ஆக வேண்டும் கனவு கண்டுள்ளார். கல்லூரி முடித்துவிட்டு 2 ஆண்டுகள் குடிமைப்பணித் தேர்வு எழுதியுள்ளார். 2 முறையும் தோல்வி. அவரது தந்தை ஷிவாங்கி கோயலுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார். திருமணத்திற்கு பின் படிப்பை விட்டு விட்டு வீட்டுப்பொறுப்புகளை மட்டும் பார்த்து வந்துள்ளார். ஷிவாங்கி கோயலுக்கு ரெய்னா என்ற மகள்.திருமண வாழ்க்கை சிறப்பானதாக அமையவில்லை. மாமியார் கொடுமையால் கணவனைப் பிரிந்துவரும் சூழல் உருவாகியுள்ளது.
கணவரை சட்டப்படி விவாகரத்து செய்வதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.தற்போது பெற்றோர் மற்றும் தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். பெற்றோர் வீட்டில் இருக்கும் கோயல் தன தனித்துவத்தை, திறனை விட்டு விலகிவிடக்கூடாது என்று உறுதிகொண்டார்.மீண்டும் புத்தகங்களைக் கையில் எடுத்தார். மகளை பெற்றோர் கவனித்துக்கொள்ள, குடிமைப்பணித்தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார். இன்று அளவில் 177 ஆம் இடம் பெற்றுள்ளார்.
“சமூகத்தில் திருமணமான பெண்கள் தங்கள் மாமியார் வீட்டில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்காக பயப்பட வேண்டாம், உங்கள் சொந்த காலில் நிற்க முடியும் என்பதைக் காட்டுங்கள், பெண்கள் எதையும் செய்ய முடியும் என்பதையே நான் சொல்ல விரும்புகிறேன். நன்றாகப் படித்து, கடினமாக உழைத்தால், ஐஏஎஸ் ஆகலாம்,” என்று ஷிவாங்கி மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்.
யுபிஎஸ்சி தேர்வில் விருப்பபாடமாக சமூகவியல் பாடத்தை எடுத்துள்ளார். எந்த கோட்சிங்கும் இன்றி சுயமாக படித்த ஷிவாங்கி கோயல், தற்போது யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.