இந்திய சந்தையில் நடப்பாண்டு மே மாதம் 10,216 கார்களை விற்பனை செய்துள்ளதாக டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் டொயோட்டா நிறுவனம் வெறும் 707 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் பிரம்மாண்டமான வளர்ச்சியை டொயோட்டா நிறுவனம் பதிவு செய்துள்ளது.

ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாகவே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் டொயோட்டா கார்களின் விற்பனை மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலைமை இயல்பாக இருப்பதால், டொயோட்டா நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 10,216 கார்களை விற்பனை செய்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா நிறுவனம் 7 தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. க்ளான்சா, அர்பன் க்ரூஸர், இன்னோவா க்ரிஸ்ட்டா, ஹைலக்ஸ் பிக்-அப் டிரக், ஃபார்ச்சூனர், கேம்ரி ஹைப்ரிட் மற்றும் வெல்ஃபயர் என டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 7 தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனை செய்து கொண்டுள்ளது.

தற்போது இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை டொயோட்டா நிறுவனம் எடுத்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடலை டொயோட்டா நிறுவனம் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட 2022 க்ளான்சா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா க்ளான்சா காரின் 2022 மாடலானது, மிகப்பெரிய அளவில் அப்டேட் செய்யப்பட்டு, விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களை நன்றாக கவர்ந்துள்ளது.

அதேபோல் புதிய ஹைலக்ஸ் பிக்-அப் டிரக்கையும் டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து இன்னும் பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. க்ளான்சா காரின் புதிய சிஎன்ஜி மாடல், புதிய தலைமுறை அர்பன் க்ரூஸர் போன்றவை இதில் முக்கியமானவை.

இந்த வரிசையில்தான் இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய மாடலும் வருகிறது. இதற்கிடையே கார்களுக்கான தேவை தொடர்ந்து உயர்ந்து வருவதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் தங்களது கார்களுக்கு கிடைக்கும் முன்பதிவுகளின் எண்ணிக்கையும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது எனவும் டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய க்ளான்சா காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் ஃபார்ச்சூனர் போன்ற கார்களும் விற்பனையில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதாக டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது.

டொயோட்டா நிறுவனம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் 2 கார்களை தங்களது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது ரெகுலர் வாசகர்களுக்கு தெரியும். அவை டொயோட்டா க்ளான்சா (மாருதி சுஸுகி பலேனோ) மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் (மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா) ஆகியவை ஆகும்.

மாருதி சுஸுகி நிறுவனம் தற்போது புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது. நடப்பு ஜூன் மாதமே புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. வரும் ஜூலை மாதம் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வரும் காலங்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் எர்டிகா உள்ளிட்ட கார்களையும் டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தங்களது பிராண்டின் கீழ் விற்பனை செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.