இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் எம்ஜி (MG). இதன் முழு பெயர் மோரிஸ் கராஜஸ் (Morris Garages) ஆகும். இந்நிறுவனம், ஹெக்டர், ஹெக்டர் பிளஸ், குளோஸ்டர் மற்றும் இசட்எஸ் இவி (மின்சார கார்) ஆகிய சூப்பரான கார் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இந்த அனைத்து மாடல்களுக்கும் இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு வழங்குவதிலேயே அதிக சிறப்பு வசதிகள் கொண்ட வாகனமாக குளோஸ்டர் இருக்கின்றது. இந்த காரில் எக்கசக்க தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மிக தெளிவாகக் கூற வேண்டும் எனில், அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் வாயிலாக ஆட்டோமேட்டிக் சேவைகள் பலவற்றை காரில் பெற்றுக் கொள்ள முடியும்.

அதாவது, அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், அவசர காலத்தில் தானாகவே பிரேக் பிடித்தல், தானாகவே பார்க் செய்தல், லேன் டிபார்ச்சர் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் போன்ற சிறப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய சூப்பரான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட காரிலேயே பிரபல நடிகை சன்னி லியோன் சமீபத்தில் காட்சித் தந்திருக்கின்றார்.
இந்த கார் அவருக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் அவர் மும்பை விமான நிலையம் வந்தபோதே இந்த காரில் காட்சியளித்திருக்கின்றார். இந்த நடிகை மிகப் பெரிய மசராட்டி சொகுசு கார் பிரியை ஆவார். எனவே இவரிடத்தில் அவரை போலவே அதிக கவர்ச்சியான மசராட்டி கார்கள் பல பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றிலேயே சன்னி லியோன் அதிகளவில் காட்சித் தந்திருக்கின்றார்.

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே சன்னி லியோன் எம்ஜி குளோஸ்டர் காரில் வந்திறங்கும் வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. இதன் வாயிலாகவே அவர் பிரமாண்ட தோற்றம் கொண்ட குளோஸ்டர் காரையும் வைத்திருக்கின்றார் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் அதிக பாதுகாப்பானது மற்றும் மிக அதிக சொகுசு வசதிகளைக் கொண்டது ஆகும்.

மேலே பார்த்ததைப் போல் இந்த கார் அவசர காலத்தில் தானாகவே பிரேக்கை பிடித்து பயணிகளைக் காப்பாற்றும். இதுதவிர சாலைகளில் ஏற்படும் சிக்கல் மற்றும் டிரைவர் தவறு செய்தால் அதுகுறித்த அறிவிப்பை வழங்கவும் இக்கார் தயங்காது. இந்த மாதிரியான சூப்பரான காரில் சன்னி லியோன் பயணித்தது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

எம்ஜி நிறுவனம் இக்காரை டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற முழு அளவு எஸ்யூவி கார் பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற மாடலுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்கியிருக்கின்றது. ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வில் இக்கார் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் ஆரம்ப நிலை தேர்வின் விலையே ரூ. 31.49 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், பெரிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் மின் விளக்குகள், பனோரமிக் சன்ரூஃப், 7 ஏர் பேக்குகள், இஎஸ்பி, டிராக்சன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசன்ட் கன்ட்ரோல், ஏபிஎஸ், 4 டிஸ்க் பிரேக்குகள், ரியர் வியூவ் கேமிரா, டிரைவர் ஃபட்டிக் மானிட்டர், க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமின்றி, ஸ்டார்ட் / ஸ்டாப் அம்சம், பன்முக டிரைவிங் மோட்கள், சாவியில்லா நுழைவு, கார் இணைப்பு தொழில்நுட்பம், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி மின் விளக்குகள், 19 அங்குல அலாய் வீல்கள், தானாகவே வைப் செய்யும் கருவி உள்ளிட்ட அம்சங்களும் அக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எஞ்ஜினை பொருத்தவரை 2.0 லிட்டர் மோட்டாரே அனைத்து விதமான தேர்வுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வேரியண்டை பொருத்து அதன் திறன் ட்யூன்-அப் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், ஆரம்ப நிலை தேர்வுகளில் 2.0 லிட்டர் சிங்கிள் டர்போ டீசல் மோட்டாரும், உயர் நிலை தேர்வுகளில் 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் மோட்டாரும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2.0 லிட்டர் சிங்கிள் டர்போ டீசல் மோட்டார் அதிகபட்சமாக 163 பிஎஸ் மற்றும் 375 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதேபோல், 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் மோட்டார் 218 பிஎஸ் மற்றும் 480 என்எம் டார்க்கை வெளியற்றும் திறனைக் கொண்டுள்ளது.

8 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் வழக்கமான கியர்பாக்ஸ் தேர்வாக இரு தேர்வுகளிலும் வழங்கப்படுகின்றது. அதேவேலையில், ட்வின் டர்போசார்ஜட் வெர்ஷனில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்பட்டு வருகின்றது. இப்படியான சூப்பரான காரிலேயே இளைஞர்களின் கனவு நாயகி சன்னி லியோன் காட்சித் தந்திருக்கின்றார்.