100 ஆடுகள், 10,000 பேருக்கு விருந்து: மதுரை அருகே 300 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோயில் திருவிழா | 300 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோவில் திருவிழா: 100 ஆடுகள் பலியிடப்பட்ட மாபெரும் விருந்து


மதுரை: மதுரை அருகே 300 ஆண்டுகளாக ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பிரம்மாண்ட கறி விருந்து கோயில் திருவிழா இன்று நடந்தது.

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள சொரிக்காம்பட்டி பெருமாள்கோவில்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள கரும்பாறை முத்தையா கோயில் விழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்தக் கோயில் திருவிழாவில் பாரம்பரிய முறைப்படி ஆண் பக்தர்கள் மட்டுமே பங்கேற்று வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்கும் ஆண்களுக்கு விருந்து வைப்பதற்காக ஆடுகள் கோயிலிலேயே வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மெய்ச்சலுக்காக வயல் மற்றும் விளைநிலங்களில் உணவைத் தேடி செல்லும்போது முத்தையா சாமியே வந்து தங்களது வயலில் இரை தேடுவதாக நம்பிக்கை வைத்து அந்தப் பகுதி மக்கள் அந்த ஆடுகளை விரட்டமாட்டார்கள்.

இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா இன்று நடந்தது. கோயிலில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை தொடங்கிய பின்னர், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100 ஆடுகள் பலியிடப்பட்டு 250 மூடை அரிசியை பயன்படுத்தி சாதத்துடன் உணவாக சமைக்கப்பட்டது. பின் தயார் செய்த உணவு விழாவில் பங்கேற்ற ஆண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தக் கறி விருந்தில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தானது வாழை இலையில் சாதமும் ஆட்டுகறியும் வைத்து பரிமாறப்பட்டது. இதனை சாப்பிட்ட பிறகு ஆண்கள் தங்கள் இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வது வழக்கம்.

ஒரு வாரத்திற்கு பின்பு இலைகள் காய்ந்த பிறகே பெண்கள் கோயிலின் தரிசனத்திற்கு வருவார்கள். இந்தக் கறி விருந்தில் திருமங்கலம், சொரிக்கம்பட்டி பெருமாள்கோவில்பட்டி குன்னம்பட்டி, கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குழந்தை வரம், உடல் ஆரோக்கியம் வேண்டி நேர்த்திக்கடனுக்காக ஆடுகளை கோயிலுக்கு செலுத்துவார்கள். அந்த ஆடுகள், இந்த விழாவில் கறி விருந்திற்காக பலியிடப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

சொரிக்காம்பட்டி எஸ்.பாண்டி என்பவர் கூறுகையில், ”கடந்த 300 ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தையொட்டி விழா நடைபெறும். தற்போது அதிக மழை பெய்து கண்மாய் முழுவதும் நீரால் நிரம்பி இருந்த சூழல் காரணமாக திருவிழா சற்று தாமதமாக நடைபெறுகிறது. சுமார் 100 ஆடுகளை பலியிட்டு 50-க்கும் மேற்பட்ட அண்டங்களில் சமைத்து கருப்பசாமிக்கு படையல் வைத்து உணவு அருந்தி நேர்த்திக்கடனை செலுத்தினோம். ஒவ்வொரு ஆண்டும் தங்களது குறைகள் தீர்த்த சாமிக்கு இந்த ஆண்டே ஆடுகளை வாங்கி செலுத்துவது இந்த திருவிழாவின் ஐதீகமாக உள்ளது” என்றார்.





Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube