விருத்தாசலம்: சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற ரயிலில் குடிபோதையில் ரகளை செய்த 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 7.15 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் பயணம் செய்த 5 பேர் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சக பயணிகள் விழுப்புரத்தில் ரயில் நின்றபோது டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவர் போதையில் ரகளை செய்தவர்களை கண்டித்துள்ளார். ஆனால் அதையும் கேட்காமல் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் டிக்கெட் பரிசோதகர் திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அவர்கள் விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து இரவு 11 மணி அளவில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலம் ரயில்நிலையத்திற்கு வந்தபோது ரயில்வே காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் ரகளை செய்த 5 பேரையும் கீழே இறக்கி ரயில்வே காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த 5 பேரும் போலீஸ்காரர்கள் என தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவ பரிசோதனை செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.