இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் மிகவும் பிரபலமான சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) உள்ளது. அப்படிப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக ஜி-வேகன் (Mercedes-Benz G-Wagen) திகழ்கிறது.

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer ), புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஜி ஜி63 ஏஎம்ஜி (Mercedes-Benz G63 AMG) காரை தற்போது வாங்கியுள்ளார். இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையே 2.45 கோடி ரூபாய் என்பது மலைக்க வைக்கும் விஷயமாகும்.

செலனைட் க்ரே மெட்டாலிக் நிறத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த புதிய காரை வாங்கியுள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த காரில் பலமுறை ஏராளமான மாற்றங்களை செய்துள்ளது. ஆனால் டிசைன் என்ற விஷயத்தில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டதில்லை. பிரபலமான மனிதர்கள் பலரும் இந்த காரை வாங்குவதற்கு இது மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

அத்துடன் இந்த காரில் 4×4 சிஸ்டமும் வழங்கப்படுகிறது. எனவே ஆஃப்-ரோடுகளிலும் இந்த கார் அமர்க்களப்படுத்தும். மெர்சிடிஸ் பென்ஜி ஜி63 ஏஎம்ஜி கார், ஆஃப்-ரோடு சாகசங்களில் ஈடுபடும் பல்வேறு வீடியோக்கள், இணையத்தில் ஏராளமாக உலா வருகின்றன. இந்த காரில், 4.0 லிட்டர் வி8 பைடர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 576 பிஹெச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இன்ஜின் உருவாக்கும் சக்தியானது, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழியாக, காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. ஜி63 ஏஎம்ஜி கார் தவிர, ஜி-க்ளாஸ் ஜி350டி (G-Class G350d) மாடலையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

6 சிலிண்டர் டீசல் இன்ஜினுடன் இந்த மாடல் வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 281 பிஹெச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த மாடலிலும் கூட ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுதான் வழங்கப்படுகிறது. இந்த மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை 1.64 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் பலரிடமும் ஜி-வேகன் கார் உள்ளது. இதில், சாரா அலி கான், ரன்பீர் கபூர், பவன் கல்யாண், துல்கர் சல்மான் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இதுதவிர கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடமும் இந்த கார் உள்ளது. அத்துடன் ஆனந்த் அம்பானியும் கூட இந்த காரை சொந்தமாக வைத்துள்ளார்.

தற்போது இந்த காரை வாங்கியுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், மிகவும் தீவிரமான கார் ஆர்வலர் ஆவார். அவரிடம் ஆடி எஸ்5 (Audi S5) கார் ஒன்றும் உள்ளது. இந்த கார் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 348 பிஹெச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும் திறன் இந்த காருக்கு உண்டு. அதே நேரத்தில் இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிலோ மீட்டர்கள். ஆடி நிறுவனத்தின் க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக, இன்ஜின் உருவாக்கும் சக்தி காரின் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் மற்றொரு நட்சத்திர வீரர்களில் ஒருவரான விராட் கோஹ்லியும் ஆடி எஸ்5 காரை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த 2017ம் ஆண்டே ஆடி எஸ்5 காரை வாங்கி விட்டார். அவர் வாங்கிய ஆடி எஸ்5 கார், அனைவரையும் கவரக்கூடிய வகையில் சிகப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும்.