நாடு முழுவதும் அமைக்கப்படும் பல தேர்வு மையங்களில் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் 3 மணி நேரம் நீட் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக சுமார் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதுகிறார்கள். வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆயிரக்கணக்கில் காசு செலவழித்து நீட் தேர்வை எதிர்கொள்ள கோச்சிங் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கிறர்கள். ஒரு சில மாணவர்கள் சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்தபடியே நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து கொண்டு தேர்வெழுத செல்கிறார்கள். உரிய கோச்சிங் பெறாமல் நீட் தேர்வுக்கு வீட்டிலேயே தயாராவது கடினமான பணி மற்றும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால் நீட் ஒரு கடினமான தேர்வு. எனினும் சரியாக தயாராவது மற்றும் உறுதியுடன் இருப்பதன் மூலம் கோச்சிங் செல்லாமலேயே நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றிபெற முடியும். இதற்காக நிபுணர்கள் வழங்கி உள்ள டிப்ஸ் பற்றி இங்கே பார்க்கலாம்..
படிப்புத் திட்டம் ( study plan):
மாணவர்கள் தத்தம் ஆர்வத்திற்கு ஏற்ப படிக்க மற்றும் தேர்வுகளுக்குத் தயாராக வெவ்வேறு வழிகளை பின்பற்றுகிறார்கள். நீட் தேர்விற்காக கோச்சிங் கிளாஸ் எதுவும் செல்ல வேண்டாம் என்று முடிவெடுக்கும் மாணவர்கள் முதலில் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு படிப்பு திட்டத்தை வரையறுத்து கொள்ள வேண்டும். பிறரை கேட்டு அந்த திட்டத்தை வரையறுப்பதை விட, தங்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு படிப்பு திட்டத்தை மாணவர்கள் சுயமாக தயாரித்து கொள்வது சிறந்தது. பகலில் என்ன படிக்க வேண்டும், இரவில் என்ன படிக்கச் வேண்டும் என்பதை மாணவர்களே முடிவு செய்து பாடங்களை பிரித்து கொள்ளலாம்.
தேர்வு முறையை புரிந்து கொள்ள வேண்டும்:
நீட் தேர்வுக்கு தயாராகும் போது தேர்வு முறையை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். வெறும் பேப்பர் செக்ஷன்ஸ் மற்றும் மொத்த கால அளவு (total duration) மட்டும் போதாது. ஒரு பிரிவில் எப்படி கேள்விகள் கேட்கப்படுகின்றன, எந்த தலைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பலவற்றை மாணவர் புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடமிருந்து என்ன எதிர்பார்ப்பார்கள் என்பதையும் ஒரு மாணவர் புரிந்து தேர்வுக்கு தயாராவது அவசியம்.
Also Read : தனியார் பள்ளிகளில் கட்டணம் இல்லாமல் பிள்ளைகளை சேர்க்கலாம்
பேஸிக் ஸ்டடி மெட்டீரியல்:
நீட் போன்ற போட்டித் தேர்வுக்கு மார்க்கெட் மற்றும் ஆன்லைன் என ஏராளமான புத்தகங்கள் மற்றும் ரிசோர்ஸ்கள் உள்ளன. ஆனால் அதையெல்லாவற்றையும் படிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே இதற்கு சரியான வழி அடிப்படை பேஸிக் ஸ்டடி மெட்டீரியலை பின்பற்றுவது. முதலில் அடிப்படையில் கவனம் செலுத்தி விட்டு பின் கூடுதல் கல்வி ஆதாரங்களில் கவனம் செலுத்தலாம்.
சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை தெளிவுபடுத்தி கொள்ளுதல்:
நீட் தேர்வுக்கு தயாராகும் போது எழும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு சுயமாக விடை காண முயல வேண்டும். முடியவில்லை என்றால் அவற்றை மறக்காமல் குறித்து வைத்து கொண்டு பள்ளி ஆசிரியர் அல்லது நண்பரிடம் கேட்டு தெளிவு பெற வேண்டும்.
பழைய வினாத்தாள்கள்:
நீட் தேர்வு முறையை நன்றாக புரிந்து கொள்ள மற்றொரு வழி, பழைய வினாத்தாள்களில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து பார்ப்பது. வெப்சைட்/ஆன்லைன் அல்லது மார்க்கெட்டில் கிடைக்கும் முந்தைய நீட் வினாத்தாள்களை பெற்று அவற்றில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுதி பழகலாம்.
Also Read : உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் – யுஜிசி பரிந்துரை
ரிவிஷன்:
எந்தவொரு தேர்விலும் எழுதுவதற்கு முன் பாடங்களை ரிவிஷன் செய்வது மிகவும் முக்கியம். மாணவர்கள் ஒரு நாளில் படிக்கும் ஒரு தலைப்பைப் முடித்த பிறகு மீண்டும் அதே நாளில் ரிவிஷன் செய்வது சிறந்த பலனை தரும். மேலும் படித்தவை மனதில் ஆழமாக பதிய இப்பழக்கம் உதவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.