மும்பை : மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 159 ரன்கள் சேர்த்தது.
15வது ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அந்தவகையில் இன்றைய 69-வது லீக் போட்டியில்
மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, டெல்லி அணிக்கு பிரித்வி ஷா, டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணையை 3-வது ஓவரில் டேனியல் சாம்ஸ் பிரித்தார். இதனால், 5 ரன்களில் டேவிட் வார்னர் வெளியேற, மிட்செல் மார்ஷ் களத்திற்கு வந்தார். வந்த வேகத்தில் பும்ரா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி நடையைக் கட்டினார். பிரத்வி ஷாவும், பும்ரா வீசிய மற்றொரு ஓவரில் கேட்ச் கொடுத்து 24 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் . அடுத்து வந்த சர்ஃபராஸ் கானும் நிலைக்கவில்லை.
இதற்கு மேலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தால் அணியின் நிலைமை மோசமாகிவிடும் என்று எண்ணி, ரிஷப் பந்தும், ரோவ்மேன் பவல்லும் இணைந்து மும்பை அணியின் பந்துவீச்சுகளை நாலாப்புறமும் விரட்டி அடித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஷப் பண்டை, ராமன்தீப் சிங் விக்கெட்டாக்க, அவர் 39 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து, ரோவ்மேன் பவல்லும் 43 ரன்களில் போல்டாகி வெளியேறினார். அடுத்து களத்துக்கு வந்த ஷர்துல் தாக்கூர் 4 ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 159 ரன்களைச் சேர்த்தது. அக்ஷர் படேல் 19 ரன்களிலும், குல்தீப் யாதவ் 1 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
மும்பை அணி தரப்பில், பும்ரா 3 விக்கெட்டுகளையும், ராமன்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், மயங்க் மார்கண்டே, டேனியல் சாம்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.