இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்காரி (Nitin Gadkari). இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் நிதின் கட்காரி மிக முக்கிய பங்காற்றி வருகிறார். இந்த சூழலில், யூலு மிராக்கிள் (Yulu Miracle) வாகனத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் பார்வையிட்டுள்ளார்.

யூலு மிராக்கிள் என்பது எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் ஆகும். யூலு என்பது ஒரு அப்ளிகேஷன் ஆகும். அதாவது செயலி. இதன் மூலமாக குறிப்பிட்ட பகுதிகளில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை நீங்கள் வாடகைக்கு எடுத்து ஓட்ட முடியும். இந்தியாவின் பல்வேறு முக்கியமான நகரங்களில் தற்போது யூலு எலெக்ட்ரிக் டூவீலர்கள் சேவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

இதன்படி பெங்களூர், புனே, மும்பை, புவனேஷ்வர், புது டெல்லி மற்றும் குர்கான் உள்ளிட்ட நகரங்களில் யூலு எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சேவை கிடைத்து வருகிறது. இந்த சூழலில் யூலு மிராக்கிள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பார்வையிடும் புகைப்படங்களும், அதன் மீது அவர் அமர்ந்திருக்கும் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

இந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தின் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிலோ மீட்டர்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் எந்தவிதமான பிரச்னையும் இன்றி இந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை சௌகரியமாக ஓட்ட முடியும். இந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் மிகவும் எடை குறைவானது. எனவே கையாள்வதற்கும் மிகவும் எளிமையாக இருக்கும்.

பொதுவாக இரு சக்கர வாகனங்களில் சென்டர் ஸ்டாண்டு போடுவதற்கு பெண்கள் பலர் சிரமத்தை எதிர்கொள்ளும் சூழல் இருக்கிறது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அந்த பிரச்னையே இருக்காது. சென்டர் ஸ்டாண்டும் கூட மிகவும் எடை குறைவானதுதான். எனவே பெண்களாலும் இதனை மிக எளிமையாக பயன்படுத்த முடியும்.

அத்துடன் ப்ரொஜெக்டர் செட்-அப் உடன் சிறிய எல்இடி ஹெட்லேம்ப்பையும் இந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனம் பெற்றுள்ளது. அத்துடன் மொபைல் ஹோல்டரும் இந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ‘மேப்’ பார்த்து கொண்டே செல்ல வேண்டிய இடத்திற்கு எளிதாக சென்று விடலாம்.

பெரு நகரங்களில் ‘மேப்’ இல்லாமல் பயணம் செய்வது உண்மையிலேயே மிகவும் சிரமமான விஷயம்தான். எனவே இந்த வசதியும் இந்த எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சமீபத்தில் கார் ஒன்றையும் பார்வையிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

யூலு மிராக்கிள் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்திற்கு முன்னதாக அவர் பார்வையிட்டது புத்தம் புதிய ஹோண்டா சிட்டி (Honda City) கார் ஆகும். இது ஹைப்ரிட் (Hybrid) மாடல் என்பதுதான் இந்த காரின் விசேஷம். ஹோண்டா நிறுவனம் வெகு சமீபத்தில்தான் சிட்டி செடான் ரக காரின் ஹைப்ரிட் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிப்பதில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மிக முக்கிய பங்காற்றி வருகிறார். காற்று மாசுபாட்டை ஏற்படுத்தாத, அதே நேரத்தில் பெட்ரோல், டீசலுக்காக இந்தியா செலவிடக்கூடிய தொகையை குறைக்க கூடிய மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை அதிகளவில் தயாரிக்க வேண்டும் என உற்பத்தி நிறுவனங்களுக்கு அவர் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

அத்துடன் சுற்றுச்சூழலுக்கு நட்பான இத்தகைய வாகனங்களை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்பதும் அவரின் கோரிக்கையாக உள்ளது. கோரிக்கை வைப்பதுடன் நின்று விடாமல், தனது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மூலமாக, அதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.