மறைந்த பாடகர் கேகே கேரளத்தைப் பூர்விமாகக் கொண்டிருந்தாலும் மலையாளத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும்தான் பாடியிருக்கிறார். தமிழில் 60-க்கும் மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடிய அவர், மலையாளத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடியது ஏன் என்பது குறித்து ரசிகர்கள் பலரும் வினவி வந்தனர். இதற்கான பதிலை மறைந்த பாடகர் கேகே கடந்த 2017-ம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த பாடகர் கேகே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். நாளடைவில் அவர்கள் டெல்லிக்கு இடம்பெயர்ந்துவிட்டனர். இதனால் பாடகர் கேகே படித்து வளர்ந்தது எல்லாம் டெல்லியில்தான். இந்தியில் பாடத் தொடங்கிய அவர், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி அசத்தியிருக்கிறார். ஆனால், தன்னுடைய பூர்விக மொழியான மலையாளத்தில் ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியிருக்கிறார்.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான பிருத்விராஜின், ‘புதிய முகம்’ படத்தில் ‘ரகசியமாய்’ என்ற பாடலை கேகே பாடியிருந்தார்.
இது தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு ‘கோச்சி டைம்ஸ்’ பத்திரிகை சார்பில் அவரிடம் கேட்டபோது, ”நான் மலையாளத்தில் ‘புதிய முகம்’ படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியிருக்கிறேன். பல்வேறு தென்னிந்திய மொழிகளில் பாடிவரும் நான், மலையாளியாக இருந்தாலும், எனக்கு மலையாளத்தில் பாடுவது கடினமாக உள்ளது. நான் பேசும் மலையாளம் போதுமானதாக இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த அல்லது பாடல் வரிகளில் பயன்படுத்தப்படும் மற்ற வார்த்தைகளை உச்சரிக்கும்போது, அதை நான் கடினமாக உணர்கிறேன். இதற்கு பிறகு, நான் நிச்சயமாக இன்னும் பல பாடல்களை மலையாளத்தில் பாட முயற்சிக்கிறேன். மலையாளத்தில் பாட நான் விரும்பினேன் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது உண்மையல்ல. நான் மலையாள பாடல்களை விரும்பி கேட்கிறேன்” என்று அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கேகே பாடிய அந்த மலையாள பாடலின் வீடியோ இங்கே…