மும்பையில் உள்ள வெர்சோவா இந்து மைதானத்தில் பாடகர் கேகேவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினர் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
இந்தி, தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி புகழ்பெற்றவர் பாடகர் கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத். 53 வயதான கேகே மே 31-ம் தேதி கொல்கத்தாவின் நஸ்ரூல் மஞ்சா பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் உடல் நிலை திடீரென பாதிக்கப்பட்டது. ஏசி இல்லாமல், புழுக்கத்தால் வியர்த்து தவித்த அவர், உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.
மயக்கமடைந்த நிலையில், அருகிலுள்ள சி.எம்.ஆர்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர், சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் உடற்கூறு செய்யப்பட்டது. உடற்கூராய்வு முடிந்தது, கொல்கத்தா ரபீந்திர சடன் என்ற இடத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டது. அதில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு கேகே-வுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் கேகேவின் உடல் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் தனி விமானம் மூலம் நேற்று இரவு 8 மணி அளவில் மும்பை வந்தடைந்தனர். இதையடுத்து, அந்தேரியில் உள்ள அவரது மும்பை வீட்டில் கேகேவின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பாடகர்கள் ஜாவித் அக்தர், ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இன்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் கே.கே.வின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, வெர்சோவா இந்து தகனம் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
கே.கே.வின் உடலுக்கு அவரது மகன் நகுல் இறுதிச் சடங்குகளை, நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மேற்கொண்டார்.