இந்தியர்கள் பலர் தங்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக ரயில்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ரயில் பயணங்கள் குறைந்த செலவை வழங்கக் கூடியவை ஆகும். அதேநேரத்தில், விரைவில் உரிய இடத்திற்கு சென்று சேரவும் முடியும். விமானத்துடன் ஒப்பிடும்போது இதன் பயண நேரம் மிக மிக அதிகமாக உள்ளது.

இருப்பினும், தற்போது நாட்டின் குறிப்பிட்ட சில முக்கிய நகரங்களில் மட்டுமே விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது சில முக்கிய நகரங்களில் விமானங்களை கட்டமைக்கும் பணியில் அரசு களமிறங்கியிருக்கின்றது. அதேவேலையில், விமானங்களில் பயணிக்க வேண்டும் எனில் பல ஆயிரங்களை வாரி இரைக்க வேண்டியிருக்கும்.

ஆனால், ரயில்களில் பயணம் செய்ய சில நூறு ரூபாக்களே போதுமானது. குடும்பத்துடன் பயணித்தாலே ஆயிரக் கணக்கில் மட்டும்தான் பணம் செலவாகும். இதன் காரணத்தினால்தான் லட்சக் கணக்கான மக்கள் தங்களின் அன்றாட பயணங்கள் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு அதிகளவில் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர்.

அதேநேரத்தில் ஒரு சிலர் அதிக லக்கேஜ்களை யஎந்த தடையும் இன்றி ரயில்களில் எடுத்துச் செல்ல முடியும் என்கிற காரணத்திற்காகவும் ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இனி ரயில் பயணிகளினால் அதிகளவில் லக்கேஜ்களை ஏற்றி செல்ல முடியாது. இந்த செயலுக்கு ரயில்வே அமைச்சகம் தற்போது ஆப்பு வைத்திருக்கின்றது.

பேருந்துகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேலே லக்கேஜ்களை எடுத்துச் சென்றால் அதற்கு தனியாக டிக்கெட் எடுக்க வேண்டியிருக்கும். ஒரு நபருக்கான டிக்கெட்டை நடத்துனர்கள் எடுக்கச் சொல்வார்கள். இந்த மாதிரியான ஓர் சூழலை ரயில்வே நிர்வாகம் தற்போது இந்தியாவில் ஏற்படுத்தியிருக்கின்றது.

குறிப்பிட்ட அளவு எடையுள்ள பொருட்களை மட்டுமே இனி இலவசமாக எடுத்து செல்ல முடியும். ஆம், கூடுதல் எடையுள்ள பொருட்களுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். கட்டணம் செலுத்தப்படாமல் லக்கேஜ் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு கடுமையான அபராதங்களை விதிக்க இருப்பதாக ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இதற்கு முன்னதாக ரயில்களில் இதுபோன்று எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாததைப் போன்றே சூழல்களே நிலவியது. ரயில் பயணிகள் மூட்டை மூட்டையாக லக்கேஜ்களை எடுத்துச் செல்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதை இந்திய ரயில்வே நிர்வாகமும் கவனித்து வந்திருக்கின்றது. இந்த நிலையிலேயே அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்வோருக்கு ஆப்பு வைக்கும் விதமாக எச்சரிக்கை அறிவிப்பை அது வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ரயில்வே அமைச்சகம் ஓர் பதிவை வெளியிட்டிருக்கின்றது. அந்த பதிவில், “அதிகபட்ச லக்கேஜ்களால் ரயில் பயணம் மோசமானதாக மாறி வருகின்றது. ரயிலில் பயணிக்கும்போது அதிகப்படியான பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம். ஒரு வேலை உங்களிடம் அதிகப்படியான பொருட்கள் இருந்தால், பார்சல் அலுவலகத்தில் சென்று அப்பொருட்களை முன் பதிவு செய்து கொள்ளவும்” என தெரிவித்துள்ளது.

இந்திய ரயில்வே விதிகளின்படி, ஓர் பயணி அவர் பயணிக்கும் வகுப்பைப் பொருத்து 40 கிலோ முதல் 70 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை எந்த தடையுமின்றி அவருடன் சேர்த்து ரயில் பெட்டியில் எடுத்துச் செல்லலாம். இந்த குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் எனில் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

வகுப்பு வாரியாக எடை வரம்பு:
நீங்கள் ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணி என்றால் உங்களுடன் 40 கிலோ வரை எடையுள்ள பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். இதற்கு எந்த விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதேபோல், ஏசி பெட்டியில் பயணிப்பவராக இருந்தால் நீங்கள் 50 கிலோ வரையுள்ள எடைக் கொண்ட லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். முதல் வகுப்பு ஏசியில் பயணிப்பவர்கள் அதிகபட்சமாக 70 கிலோ வரை அவர்களது உடைமைகளை எடுத்துச் செல்ல முடியும்.

அனுமதியில்லா பொருட்கள்
நீங்கள் எந்த வகுப்பில் பயணித்தாலும் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டும் ரயில் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. எளிதில் தீப்பற்றக் கூடிய மற்றும் துர்நாற்றம் வீசக் கூடிய பொருட்களுக்கு துளியளவும் அனுமதியில்லை. குறிப்பாக, கேஸ் சிலிண்டர்கள், தீப்பற்றக் கூடிய ரசாயனம், பட்டாசு, அமிலம், எண்ணெய், கிரீஸ், நெய் உள்ளிட்ட பொருட்களை ரயில் எடுத்துச் செல்லவும் அனுமதியில்லை என ரயில்வே நிர்வாகம் அதிரடியாக அறிவித்திருக்கின்றது.

இந்த தடைச் செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள தடைச் செய்யப்பட்ட பொருட்களை மீறி எடுத்துச் சென்றால் ரயில்வே சட்டம் 164வது பிரிவின்கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல ரயில் பயணிகளுக்கு அதிக எடைக் கொண்ட லக்கேஜ்களை எடுத்து வந்ததற்காக ரயில்வே துறை கடந்த காலங்களில் அபராதம் விதித்திருக்கின்றது. இந்த சிக்கலில் சிக்கியவர்கள், “இது என்னங்க புதுசா இருக்கு. நான் எப்பவுமே இப்படிதானே நிறைய லக்கேஜ்களை எடுத்து வருவேன். இப்போ என்னமோ புதுசா அபராதமெல்லாம் கேக்குறீங்க” என புலம்பி தள்ளியிருக்கின்றார்கள். இனி வரும் காலங்களில் இன்னும் பலர் இம்மாதிரியாக புலம்புவார்கள் என ரயில்வே நிர்வாகனத்தின் தற்போதையே புதிய ட்வீட்டால் தெரிய வந்திருக்கின்றது.