”வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் ஒரு கணத்தில் கவிதையாக மாறிவிடும்” என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி தலைமையில், கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவாக ஹைக்கூ கவிதை போட்டிகள் இந்த ஆண்டு முதல் நடத்தப்படுகின்றன. இந்த போட்டியில் வென்றவர்களுக்கு முதல் பரிசு 25000 ரூபாயும், இரண்டாவது பரிசு 15,000 ரூபாயும், மூன்றாவது பரிசு 10,000 ரூபாயும் வழங்கப்படுகிறது. மேலும் ஐம்பது கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்ப்படுகிறது இந்த 53 கவிதைகளும் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் நூலாக வெளியிடப்படும். அந்த வகையில் இந்தாண்டு ‘வாடியது கொக்கு’ என்ற தலைப்பில் நூல் வெளியாகிறது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், இயக்குநர் என். லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, ”கவிக்கோ அப்துல் ரகுமானை நேரில் சந்தித்து பேசியிருக்கிறேன். அவரின் கவிதைகளை வாசித்த பின் தான் எனக்கு கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. ஆனால், அவரை பார்க்க சென்றபோதெல்லாம் அவர் ஒரு கவிஞர் என்பதை தாண்டி குருவாகவே திகழ்வார். அவருடன் பேசிய பதிவுகள் எங்களிடம் உள்ளன. தக்க சமயம் வரும் வேளையில் அதை வெளியிடுவோம்.
ஆனந்த விகடன் இதழ் வந்த காலத்தில் போஸ்ட் கார்ட் மூலம் கவிதை எழுதி அனுப்பியுள்ளேன். 1991ஆம் வருடத்தில் அப்போது என் கவிதைகளை அங்கீகரித்து இதழில் அச்சடித்து வந்த போது தான் எனக்குள்ளும் ஏதோ ஒரு திறமை உள்ளது என்ற நம்பிக்கையோடு சென்னை கிளம்பி வந்தேன். இன்று அப்துல் ரகுமானின் பெயரில் ஹைக்கூ போட்டி நடத்துவதற்கும் அது தான் காரணம்” என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் கனிமொழி பேசுகையில், ”வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் ஒரு கணத்தில் கவிதையாக மாறிவிடும் என்பதை நான் இங்கு புரிந்து கொண்டேன். எந்த நிமிடத்திலும் வாழ்க்கை கவிதையாகி விடும் என்பதை இந்த மேடை எனக்கு உணர்த்தியுள்ளது. ஏனென்றால், இது கவிகோ நடத்தக் கூடிய ஒரு நிகழ்வு அவரே ஒரு கவிதையாக தான் வாழ்ந்திருக்கிறார்.
ஹைக்கூ கவிதை என்று நாம் பேசினால் எனக்கு இயக்குநர் லிங்குசாமி அவர்கள் எழுதிய இரண்டு கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. “உரை பூந்த வெள்ளம் காற்றில் அசையும் நாணல் பூக்கள்” மற்றொன்று எல்லாக் கவிதைகளுக்கும் உண்டான ஒரு கவிதையாக தான் நான் பார்க்கிறேன் “சட்டென எதையாவது உயர்த்திவிட்டு போகிறது பறவையின் நிழல்” ஹைக்கூவும் அதுவே. சட்டென ஒரு விஷயத்தை உணர்த்துவது தான் ஹைக்கூ.
தற்போது என்ற இடத்திலிருந்து எதிர்காலத்தை உணர்த்தும் ஒரு விஷயமாக தான் ஹைக்கூ உள்ளது. பாரதி தனக்கு பிடித்த சில ஹைக்கூ கவிதைகளை தமிழிலே மொழி பெயர்த்தார். அதன் பின்பு தற்போது கவிகோ தான் அதை செய்தார். மேலும், தற்போது ஆங்கிலத்தில் ஹைக்கூக்கள் எழுதப்படுகிறது” என்றார்.
விழாவில் இயக்குநர் சந்தோஷ், கனிமொழி எம்.பியிடம், கருணாநிதியின் 60 ஆயிரம் உருவப்படங்களை வைத்து கையால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட புகைப்படம் ஒன்றை வழங்கினார்.