உலகளவில் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ள மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஒன் மாடலின் விலை ஆனது 2.5 மில்லியன் யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.20.85 கோடி ஆகும். இந்த ஹைப்பர் காரை வெறும் 275 யூனிட்கள் மட்டுமே தயாரிக்க மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஒன் காரில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. வழக்கமாக இத்தகைய என்ஜின் மெர்சிடிஸின் ஃபார்முலா ஒன் காரில் பொருத்தப்படுவது ஆகும். 4 எலக்ட்ரிக் மோட்டார்களின் துணையுடன் இயங்கும் இந்த என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 1049 பிஎச்பி, அதாவது 782 கிலோவாட்ஸ் இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மேம்படுத்தப்பட்ட த்ரோட்டல் ரெஸ்பான்ஸிற்காக பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு எலக்ட்ரிக் மோட்டார் என்ஜினின் க்ராங்க்ஷாஃப்ட் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 161 பிஎச்பி வரையிலான ஆற்றலை வழங்கக்கூடியது. மீதி இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் காரின் முன் சக்கரங்களை இயக்க பயன்படுகின்றன. இவை இரண்டின் உதவியுடன் 322 பிஎச்பி வரையில் ஆற்றலை பெறலாம்.

ஒன் ஹைப்பர் காரின் என்ஜின் அதிகப்பட்ச ஆற்றலை 9,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்துகிறது. அதிகப்பட்ச டர்போசார்ஜர் பூஸ்ட் அழுத்தமானது 3.5 பார் ஆகும். 7-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் வாயிலாக இயக்க ஆற்றல்கள் காரின் அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் வழங்கப்படுகின்றன. இந்த விஷயத்தில் ஏஎம்ஜி செயல்திறன்மிக்க 4மேட்டிக்+ முழு மாறுப்பட்ட அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பும் முக்கிய பங்காற்றுகிறது.

அதுவே, ஹைப்ரிடில் இயங்கும்போது இயக்க ஆற்றல் பின் சக்கரங்களுக்கும், எலக்ட்ரிக்கில் இயங்கும்போது முன் சக்கரங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த ஆற்றல்-வழங்கி அமைப்பில் டார்க் வெக்டரிங்கும் உள்ளது. பரிமாண அளவுகளை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஒன் காரின் நீளம் 4,756மிமீ, அகலம் 2,010மிமீ மற்றும் உயரம் 1,261மிமீ ஆகும். இந்த செயல்திறன்மிக்க ஹைப்பர் காரின் வீல்பேஸ், அதாவது முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் 2,720மிமீ ஆகும்.

எடை 1,695 கிலோ ஆகும். மொத்த பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 55 லிட்டர்கள். புதிய மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஒன் மாடலின் இரு பக்கங்களிலும் 5-இணைப்பு அலுமினியம் சுருள்கள் வழங்கப்பட்டிருக்க, சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் குறுக்காக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரு புஷ்-ராட் சுருள் ஸ்ட்ரட்களும், பின்பக்கத்தில் தகவமைத்து கொள்ளக்கூடிய டேம்பிங் அட்ஜெஸ்ட்மெண்ட்டும் இடம்பெற்றுள்ளன.

பிரேக்கிங் பணியை முன்பக்கத்தில் 6-பிஸ்டன் நிலையான அலுமினியம் காலிபர்களுடன் காற்றோட்டமான & துளையிடப்பட்ட 398மிமீ கார்பன்-ஃபைபர் பீங்கான் டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கத்தில் 4-பிஸ்டன் நிலையான அலுமினியம் காலிபர்களுடன் 380மிமீ கார்பன்-ஃபைபர் பீங்கான் பிரேக்குகளும் கவனித்து கொள்ள வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்போர்ட்ஸ் காரின் முன் சக்கரங்கள் 19-இன்ச்சிலும், பின் சக்கரங்கள் 18-இன்ச்சிலும் பொருத்தப்பட்டுள்ளன.

அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டவைகளாக விளங்கும் இந்த சக்கரங்கள் 10-ஸ்போக் டிசைனில் உள்ளன. இது நிலையான தேர்வாகும். கூடுதல் தேர்வாக, மாங்கனீசால் தயாரிக்கப்பட்ட 9-ஸ்போக் சக்கரங்களை பெற முடியும். இத்துடன் காற்றியக்கவியலுக்கு இணக்கமாக ஆக்டிவ் ஏரோடைனாமிக் அமைப்பையும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஒன் பெற்றுள்ளது. ரேஸ் மோடில் செயல்பாட்டிற்கு வரும் இந்த அமைப்பின் வாயிலாக காரின் உயரமானது சற்று தாழ்வாக மாறும்.

அத்துடன் ரேஸ் மோடில் பெரிய அளவிலான ஸ்பாய்லரும் பயன்பாட்டிற்கு வரும். இதன் மூலம் காரின் கீழ்நோக்கிய அழுத்தல் ஆனது 20% அதிகரிக்கும். உட்புறத்தில் மோட்டார்ஸ்போர்ட்-ஸ்டைலில் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டுனர் தனது இருக்கையின் பொசிஷனை மாற்ற முடியாது என்றாலும், பெடல் பெட்டகத்தையும், எஃப்1-ஸ்டைல் ஸ்டேரிங் சக்கரத்தையும் தேவைக்கேற்ப முன்பக்கமாகவும், பின்பக்கமாகவும் நகர்த்தலாம். ஓட்டுனருக்கான திரையும், இன்ஃபோடெயின்மெண்ட் திரையும் தலா 10.1 இன்ச்சில் உள்ளன. இவை இரண்டும் ஏஎம்ஜி ஒன் கிராஃபிக்ஸை கொண்டுள்ளன.