இந்திய அணிக்காக தன் சாதனையை ஒரு பொருட்டாகவே கருதாத மிதாலி ராஜ் என்னும் கிரிக்கெட் போராளி! | இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ். கிரிக்கெட் உலகில் இவர் கடந்து வந்த உத்வேகப் பாதை குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

கிரிக்கெட் விளையாட்டை மிகவும் தீவிரமாக ரசிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. கோடான கோடி மக்களின் அபிமானத்தை பெற்ற இந்த விளையாட்டில் எத்தனையோ விளையாட்டு வீரர்கள் வந்து சென்றுள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே ஜாம்பவான்களாகவும், நட்சத்திர வீரர்களாகவும் மிளிர்ந்துள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் பட்டியலில் தவறாமல் தனக்கான இடத்தை பிடித்த வீராங்கனைதான் மிதாலி ராஜ். ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த இடத்தில் தனது ஆட்டத்தால் அதை மடைமாற்றியவர்.

கவாஸ்கர், ஸ்ரீகாந்த், கபில் தேவ், அசாருதீன், சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், யுவராஜ், தோனி, கோலி என முழக்க மத்தியில் ‘மிதாலி’ என ரசிகர்களை முழங்கியவர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முகவரி என்று கூட மிதாலியை ரசிகர்கள் போற்றுகின்றனர். இந்திய அணியின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒருவராக அறியப்பட்டவர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மிதாலி ராஜ் பிறந்து வளர்ந்தார். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மிதாலி ராஜின் தந்தை துரைராஜ், விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர். மிதாலி, சிறுமியாக இருந்தபோது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லாதவர். அவரை ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருடைய பெற்றோர் கிரிக்கெட் பக்கம் அவரைத் தள்ளிவிட்டனர். மிதாலி கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடியபோது 10 வயது.

16 வயதினிலே: இந்திய கிரிக்கெட் அணியில் 16 வயதில் என்ட்ரி கொடுத்தவர் மிதாலி. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பை நூலிழையில் இழந்தார். 1999, ஜூன் 26-ஆம் தேதி தனது முதல் சர்வதேச போட்டியில் இந்தியாவுக்காக விளையாடினார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான அந்த ஒருநாள் போட்டியில் சதம் விளாசி தனது என்ட்ரியை பதிவு செய்தார். சிங்கத்தின் என்ட்ரி கர்ஜனையுடன் தான் இருக்கும் என்பது போல இருந்தது அது. அதன் பின்னர் தனது கடைசி போட்டி வரை தனது ரன் வேட்டையை தொடர்ந்தார்.

அதிக ரன்களை குவித்த வீராங்கனை: டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து ஃபார்மேட்டிலும் அதிக ரன்களை குவித்துள்ளவர் மிதாலி ராஜ். மறுபக்கம் மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ள வீராங்கனையாக அறியப்படுகிறார். மொத்தம் 211 ஒருநாள் இன்னிங்ஸ் விளையாடி 7805 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்காக இந்த 23 ஆண்டுகளில் 333 போட்டிகளில் 10868 ரன்கள் எடுத்துள்ளார்.

  • தொடர்ச்சியாக 7 அரை சதங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார் மிதாலி. 2017-இல் இந்த சாதனையை படைத்தார்.
  • உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை.
  • தொடர்ச்சியாக 109 போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்தவர்.
  • லேடி டெண்டுல்கர் என போற்றப்படுகிறார்.

17 ஆண்டுகள் அணியை வழிநடத்திய கேப்டன்: இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 2005 முதல் வழிநடத்தி வந்தவர் மிதாலி. அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை பெற்றுள்ளது. 2017 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தியது இந்தியா. அதே போல தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2005 உலகக் கோப்பையிலும் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடைசியாக இந்திய அணிக்காக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 2022 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் 68 ரன்களை குவித்தார் மிதாலி. அதுவே அவரது கடைசி போட்டியாக அமைந்துள்ளது.

16547043133057

களத்தில் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி விளையாடும் அற்புதமான வீராங்கனை மிதாலி ராஜ். பார்ப்பதற்கு அவர் நிதானமாக விளையாடுவதைப் போல் தெரிந்தாலும், ரன் குவிப்பில் வல்லவர். மிதாலி எந்த நிலையில் களமிறங்கினாலும் எதிரணியினருக்கு அச்சம் தரும் வீராங்கனையாகவே விளங்கினார். அதன் காரணமாகவே எதிரணிக்குக் கிளியை ஏற்படுத்தும் வீராங்கனை என்ற சிறப்பையும் பெற்றார்.

ஒரு சம்பவம் இங்கே நினைவுகூரப்பட வேண்டும். உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டது. ஆனால், அந்தப் போட்டியின்போது, ​​ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த வீராங்கனை என்ற உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார் இந்திய கேப்டன் மிதாலி ராஜ். எனினும், அணியின் தோல்வியின் காரணமாக, தன் இமாலய சாதனையை ஒரு பொருட்டாகவே அவர் கண்டுகொள்ளவில்லை.

அதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​“இந்த முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் தோற்றதால் கடும் ஏமாற்றமடைந்துள்ளேன். வென்றிருந்தால் கொண்டாட்டங்கள் இருந்திருக்கலாம். ஆனால், ஆட்டத்தின் முடிவில், இந்தச் சாதனையை நிகழ்த்திய உணர்வே எனக்கு ஏற்படவில்லை.

என்னைப் பொறுத்தவரை இந்தச் சாதனையில் புதிதாக எதுவும் இல்லை. உலகக்கோப்பையில் இந்தச் சாதனை நிகழ்ந்திருப்பதால் அதற்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. ஆனால், அணி வெற்றி பெறாத நிலையில், தனிநபர் சாதனைகள், ஆட்டம் ஒரு பொருட்டல்ல என்றே நான் கருதுகிறேன்” என்றார்.

இதுதான் மிதாலி.

விளையாட்டில் சாதிக்க விரும்பும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார் மிதாலி. கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து மிதாலி ஓய்வு பெற்றிருந்தாலும் அவரது வாழ்வின் அடுத்த இன்னிங்ஸும் கிரிக்கெட் சார்ந்தே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது ஆட்டத் திறனாலும், அணியின் வெற்றிக்கு பங்களிப்பாலும் என்றென்றும் மிதாலி ராஜுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் கடமைப்பட்டிருக்கிறது.

ஆல் தி பெஸ்ட் மிதாலி!

Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube