இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது. மாணாக்கர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 06-5-2022.
நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்,உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 17 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்ச வயது வரம்பு (Upper Age Limit) நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் வயது தடையாக இருக்கப்போவதில்லை. இதன்காரணமாக, நீட் நுழைவுத் தேர்வு எழுதவிருக்கும் இளம் மாணவர்கள் கூடுதல் சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs) இந்தியாவின் வெளிநாடு வாழ் குடிமக்கள் (OCIs) இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள்(PIOs), வெளிநாட்டு குடிமக்கள் (Foreign Nationals) ஆகியோர் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEET (UG) 2022 to be held in 14 cities outside India for the first time. @dpradhanbjp @EduMinOfIndia
— National Testing Agency (@DG_NTA) April 6, 2022
முதன்முறையாக, இத்தேர்வுக்காக இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
விண்ணப்பக் கட்டணம்:
ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 07-05-2022.
பொதுப் பிரிவினர் – ரூ. 1600 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – கிரீமிலேயர் அல்லாதோர் – ரூ – 1500 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்
பட்டியல் கண்ட சாதிகள், பட்டியல் கண்ட பழங்குடிகள்/ மாற்றுத் திறனாளிகள்/ மூன்றாம் பாலினத்தவர் – ரூ. 900 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்
வெளிநாடுகளில் உள்ள விண்ணப்பத்தார்கள் – ரூ.8500
அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும், nta.ac.in மற்றும் neet.nta.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேறு ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால், மாணவர்கள் 011- 40759000 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பொதுவான வேண்டுகோள்:
கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.