அகமதாபாத்: ஐபிஎல் 2022 சீசனில் தங்கள் அணி டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பிடிக்கும் என யாரே எண்ணவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அந்த அணி இப்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 15-வது ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அந்த அணிக்கு இதுதான் ஐபிஎல் அரங்கில் அறிமுக சீசன். புதிய அணி சாம்பியன் பட்டம் வென்றது குறித்து பல்வேறு விதமான கருத்துகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
லீக் சுற்று தொடங்கி இறுதிப் போட்டி வரையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது குஜராத். இந்நிலையில், சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தங்கள் அணி குறித்து பிறரின் பார்வை என்னவாக இருந்தது என்பதை பகிர்ந்துள்ளார் கில்.
“இந்த சீசன் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான ஒன்று. சில ஏற்றமும், இறக்கமும் சந்தித்துள்ளேன். இருந்தாலும் இது மறக்க முடியாத ஒரு சீசனாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் எங்கள் அணியை டாப் 4 இடத்தை பிடிக்கும் அணிகளில் ஒன்றாக கூட யாரும் பார்க்கவில்லை.
தொடரை சாம்பியன் பட்டம் வென்ற அணி என நிறைவு செய்துள்ளோம். நாம் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பு ஐபிஎல் மாதிரியான தொடர்களில் நிறையவே இருக்கும். அதுவும் அணி வெற்றிப் பாதையில் செல்லும்போது அந்த வாய்ப்பு பிரகாசமானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2022 சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 483 ரன்கள் எடுத்துள்ள கில். 4 அரை சதங்கள் இதில் அடங்கும். அவரை குஜராத் அணி 8 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.