பதான் விமர்சனம்: ஷாருக்கான் ரசிகர்களுக்கான பக்கா ‘ட்ரீட்’. மற்றவர்களுக்கு..? | ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் ஒரு அதிரடி நாடகம்


நாட்டை நேசித்த ஒருவனுக்கும், நாட்டை நேசிப்பவனுக்கும் இடையிலான யுத்தத்தை ‘மாஸ்’ தருணங்களால் சொல்ல முனைந்தால் அது ‘பதான்’.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், கோபமடையும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி இந்தியாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணி, நாட்டின் மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் ரா உளவுப்பிரிவு அதிகாரியான ஜிம் (ஜான் ஆபிரஹாம்) என்பவரை நாடுகிறார். இவர்களின் சதித் திட்டங்களை ராணுவ வீரராக இருந்து ஆண்டர்கவர் ஏஜென்டாக வரும் பதான் (ஷாருக்கான்) எப்படி முறியடித்து நாட்டைக் காக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் மீண்டும் ‘பாலிவுட் பாட்ஷா’. நீண்ட நாட்களாய் தன் நாயகனை திரையில் காணாத ரசிகனின் அடங்காப் பசிக்கு சிம்பிளான ஷாருக்கானின் அறிமுகம் தீனி ஆரம்பத்தில் போதாமல்தான் இருந்தது. படம் முடியும்போது அன்லிமிடட் மீல்ஸ் போல திரையில் ஆளுமை செலுத்தும் ஷாருக்கான் ரசிகனின் மனதையும் நிறைத்து விடுகிறார். நீண்ட தலைமுடி, சிக்ஸ் பேக் பாடி, கதை சொல்லும் கண்கள், ஈர்க்கும் உடல்மொழி, அட்டகாசமான ஸ்டண்டுகளில் ‘நாயகன் மீண்டும் வரான்’ என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஷாருக்.

குறிப்பாக, படம் முடிந்த பின்பு போஸ்ட் கிரேடிட் சீன் காட்சியில் அவரும் சல்மான்கானும் இணைந்து சொல்லும் வசனங்கள் திரையரங்கை தெறிக்கவிடுகின்றன. வழக்கமான காதல் ஹீரோயினாக இல்லாமல் ஆக்ஷன் நாயகியாக களத்தில் அதகளம் செய்யும் தீபிகா படுகோன் நடிப்பில் தனித்து தெரிகிறார். அவருக்கும் ஷாருக்கானுமான கெமிஸ்ட்ரி பொருந்துகிறது. உண்மையில், நாயகனுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக ஜான் ஆபிரஹாம் தேர்ந்த நடிப்பில் இன்னொரு நாயகனாக மிளிர்கிறார். அவர் மீதான நியாயத்தால் வில்லனாக அவரை கருதமுடிவதில்லை. சல்மான் கானின் சிறப்புத் தோற்றம் திரையங்கை அதிர வைக்கிறது. அவருக்காக எழுதப்பட்ட சீன் ‘மாஸ்’ ரகம். டிம்பிள் கபடியா பிசிறில்லாத நடிப்பில் கவனம் பெறுகிறார்.

முழுக்க முழுக்க ஆக்‌ஷனையும், மூன்று முக்கிய நடிகர்களையும், ‘மாஸ்’ தருணங்களையும் முதலீடாக்கி ‘பதான்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சித்தார்த் ஆனந்த். அவை பார்வையாளர்களுக்கு கதையின் தேவையை மறக்கடித்து கடத்திச் செல்வது தான் மொத்த திரைக்கதையின் பலம்.

பார்த்துப் பழகிய 90களின் நாட்டுப்பற்று படங்களின் டிஜிட்டல் வெர்ஷன் கதைதான் என்றாலும், அதனை திரை ஆக்கம் செய்த விதம்தான் படத்தை தாங்கி நிறுத்துகிறது. அடுத்தடுத்து கோர்க்கப்பட்டிருக்கும் ‘சாகச’ சண்டைக்காட்சிகளும் அதற்கான பிரமாண்ட காட்சியமைப்பும் விறுவிறுப்பான படத்தொகுப்பும் சிறந்த காட்சியனுபவத்திற்கு உத்தரவாதம்.

டாம் குரூஸ் வகையறா சண்டைக் காட்சிகள் ஹாலிவுட்டை நினைவுபடுத்தினாலும், சில ஓவர் ஹைப் காட்சிகள் அயற்சி கொடுக்காமலில்லை. சேஸிங் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், சில சஸ்பென்ஸ்கள், ஷாருக்கானின் நாயக பிம்ப கட்டமைப்பால் முதல் பாதி சில இடங்களில் அயற்சியைக் கொடுத்தாலும் எளிதாகக் கடக்க வைக்கிறது. குறிப்பாக இடைவேளைக்கான காட்சிகள் ஆர்வத்தை கூட்டாமலில்லை.

இரண்டாம் பாதியின் முதல் அரை மணி நேரம் ‘கூஸ்பம்ப்ஸ்’ தருணங்களால் மலைக்க வைக்கிறது. அதிலும், சல்மான் கான் – ஷாருக்கான் இரு பெரும் நடிகர்களின் திரைப்பயணத்தில் சண்டைக்காட்சிகள் திரையரங்கை அசரடிக்கிறது. இருவரும் கெமிஸ்ட்ரியும், வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. அடுத்து வரும் பனிச்சருக்கு சண்டைக்காட்சிகளும் ஃபேன்பாய் தருணங்களும் படத்தின் முந்தைய அயற்சியை மறக்கடிக்கிறது.

திரையில் ஷாருக்கான் ஆதிக்கம் செலுத்தினாலும், எதிர்பார்க்கும் ஹீரோ – வில்லன் மோதலின் சிலிர்ப்பனுபவம் அந்த அளவிற்கு பார்வையாளர்களுக்கு கிட்டுவதில்லை. ஸ்பெயின், ரஷ்யா, ஆஃப்கானிஸ்தான், என ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு நாட்டில் படமாக்கப்படும் உணர்வும் ஃப்ளாஷ்பேக்குக்குள் ஃப்ளாஷ்பேக் என நகரும் கதையில் எமோஷனல் காட்சிகள் எடுக்கப்படவில்லை.

பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகள் மூலமாக படத்தை என்கேஜிங்காக கொண்டு செல்ல முயன்றிருக்கும் இயக்குனருக்கான ஐடியாவுக்கு சச்சித் பவுலோஸின் ஒளிப்பதிவும், சஞ்சித் பல்ஹாரா, அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசையும் உருவம் கொடுத்து உயிரூட்டியிருக்கிறது. அதிலும் ஜான் ஆபிரஹாமுக்கான ஸ்பெஷல் பிஜிஎம் ரசிக்க வைக்கிறது. நாட்டுப்பற்று, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, பயோவார், சர்வதேச தீவிரவாதம் என பல்வேறு விஷயங்களைப் பேசும் திரைக்கதையை தெளிவில்லாமல் சொல்ல வரும்போது ஆழமில்லாமல் தடுமாறியிருக்கிறது.

மொத்தத்தில் ஷாருக்கான் ரசிகர்களுக்கான முழுநீள ஆக்ஷன் ட்ரீட் என்பதில் ‘பதான்’ மீது சந்தேகப்படத் தேவையில்லை. தவிர்த்து, ஆக்‌ஷன், மாஸ், கூஸ்பம்ப் முகமூடிகளால் அழுத்தமில்லாத சலிப்பான கதையின் உண்மை முகத்தை பொது பார்வையாளர்களுக்கு உணர்த்தாத வரையில் ‘பதான்’ கொண்டாடப்படலாம். உணர்த்திவிட்டால்..?

(படத்தின் இறுதியில் பாட்டு முடிந்த பின்பும் திரையரங்கில் பொறுமையுடன் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு சர்ப்ரைஸ் வசனங்கள் உண்டு.)

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube