பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தைச் சேர்ந்த இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் தனது இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன், 23வது இடத்தில் அமெரிக்க வீராங்கனையான கோகோ காப் மோதினார். 18 வயதான, கோகோ காப் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை எதிர்ப்பில் தோல்விகண்டார்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக், முதல் செட்டை 6-1 என கணக்கில் சுலபமாகவே கைப்பற்றினார். இரண்டாவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் போராடிய அமெரிக்க வீராங்கனை கோகோ காப் 3-6 என்ற கணக்கில் கோட்டை விட்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் இகா ஸ்வியாடெக் தனது இரண்டாவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.