நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடித்த ‘விசித்திரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘காடுவெட்டி’ என்ற படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
‘கையில் அரிவாளுடன் இருக்குற எங்ககிட்ட வச்சு கிட்ட, அரிவாளைத்தான் எடுப்போம் என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தற்போது நடக்கும் முக்கிய சமூக பிரச்சனை ஒன்றும் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ‘உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுதான் கிடைச்சதா? என்ற வசனத்துடன் இந்த டீசர் முடிவடைவதை அடுத்து, அது எந்த சமூகப் பிரச்சனை என்பதை இந்த டீசரை பார்க்கும்போது யூகிக்க முடிகிறது.
ஆர்கே சுரேஷ் ,சுப்பிரமணியம் சிவா, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கியுள்ளார். ‘வணக்கம் தமிழ்’ சாதிக் இசையில், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பில் புகழேந்தி ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ளது.