நடப்பாண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த மாதத்தில்தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகபட்ச மாதாந்திர பயணிகள் எலெக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் இந்திய சந்தையில் ஒட்டுமொத்தமாக 3,454 பயணிகள் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது.

இதற்கு முன்பாக ஒரே மாதத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் பயணிகள் எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்தது கிடையாது. இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 476 பயணிகள் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2022ம் ஆண்டு மே மாதம் 3,454 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை 625.63 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மிகவும் சிறப்பான விற்பனை வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் வெறும் 2 பயணிகள் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் செடான் ஆகியவை ஆகும்.

இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், ஸ்டாண்டர்டு மற்றும் மேக்ஸ் என 2 வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மேக்ஸ் கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டாண்டர்டு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 30.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மேக்ஸ் மாடலில், 40.5 kWh பேட்டரி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்டு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் 14.79 லட்ச ரூபாய் முதல் 17.20 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபக்கம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் மேக்ஸ் மாடல், 17.74 லட்ச ரூபாய் முதல் 19.24 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில், 26 kWh பேட்டரி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார், 12.49 லட்ச ரூபாய் முதல் 13.64 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்துமே புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும் என்பது கவனிக்கத்தக்கது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பயணிகள் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்ற வகையில் சமீபத்தில் கர்வ் மற்றும் அவின்யா ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதில், டாடா கர்வ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வரும் 2024ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அவின்யா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் வரும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், டாடா அவின்யா கார், எலெக்ட்ரிக் மாடலாக மட்டுமே விற்பனை செய்யப்படும். ஆனால் டாடா கர்வ் கார் வித்தியாசமானது. இது முதலில் எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்படும். அதை தொடர்ந்து இந்த காரின் ஐசி இன்ஜின் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதுதவிர கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் சியாரா எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்தது. இந்த எலெக்ட்ரிக் கார் கான்செப்ட்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் கார், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.