இந்தியாவை மையமாகக் கொண்டு இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களில் டிவிஎஸ்-ம் ஒன்று. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சென்ற மே மாதத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒட்டுமொத்தமாக 3,02,982 யூனிட் டிவிஎஸ் வாகனங்கள் விற்பனையாகியிருக்கின்றன. இதில், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 2,87,058 யூனிட்டுகளாக உள்ளன. ஆமாங்க, நீங்க நினைப்பது சரிதான் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களே 2022 மே மாதத்தில் அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றன.

சென்ற ஆண்டு மே மாதத்தில் இதே இருசக்கர வாகனங்கள் வெறும் 1,54,416 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகளவில் டிவிஎஸ் இருசக்கர வாகன விற்பனையாகியிருப்பது தற்போது வெளியாகியிருக்கும் தகவல்களின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

மேலே பார்த்த விபரம் உள் நாட்டு விற்பனை மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த யூனிட்டுகளின் விபரம் ஆகும். அப்படினா உள் நாட்டில் விற்பனைச் செய்த எண்ணிக்கை எவ்வளவுதாங்கனு கேக்குறீங்களா. இதோ அதுகுறித்த விபரம், ஒட்டுமொத்தமாக 1,91,482 டிவிஎஸ் டூ-வீலர்கள் விற்பனையாகியிருக்கின்றன.

இந்த எண்ணிக்கை டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உள்நாட்டில் மவுசு அதிகரித்திருப்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இதை கூடுதலாக உறுதிப்படுத்தும் வகையில், டிவிஎஸ் நிறுவனம் சென்ற ஆண்டு 2021 மே மாத விற்பனை புள்ளி விபரங்களையும் வெளியிட்டிருக்கின்றது. அந்த மாதத்தில் 52,084 யூனிட் இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன.

பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை விபரம்:
டிவிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் பைக்குகள் 1,48,560 யூனிட்டுகளும், ஸ்கூட்டர்கள் 1,00,665 யூனிட்டுகளும் விற்பனையாகியிருக்கின்றன. கடந்த 2021ஆம் ஆண்டில் பைக்குகள் 1,25,188 யூனிட்டுகளும், ஸ்கூட்டர் 19,627 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் பல்வேறு சிப்-ஷார்டேஜால் பெருத்த சிக்கல்களைச் சந்தித்து வரும் சூழலில் டிவிஎஸ் நிறுவனம் சூப்பரான வளர்ச்சியைக் கண்டிருப்பது பிற இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கும், இந்திய வாகன உலகிற்கும் பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு நிறுவனம் தொடர் வாகன சப்ளையை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே முக்கிய காரணமாக உள்ளது.

ஏற்றுமதி விபரம்:
2021 மே மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,14,674 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்திருந்தநிலையில் நடப்பாண்டில் கணிசமான சரிவை இதில் சந்தித்திருக்கின்றது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,10,245 யூனிட்டுகளை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றது.

மூன்று சக்கர வாகன விற்பனை நிலவரம்:
டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன பிரிவு 28 சதவீதம் வளர்ச்சியைச் சந்தித்திருக்கின்றது. நிறுவனம் ஒட்டுமொத்தமாக 15,924 யூனிட்டுகள் மூன்று சக்கர வாகனங்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

மின்சார வாகனம்:
டிவிஎஸ் நிறுவனம் ஐக்யூப் எனும் பெயரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. மிக சமீபத்திலேயே இதன் அப்டேட்டட் வெர்ஷனை இந்நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த தயாரிப்பிற்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் 2,637 யூனிட் ஐ-க்யூப் மின்சார ஸ்கூட்டர்கள் 2022 மே மாதத்தில் விற்பனையாகியிருக்கின்றன.