டிவிஎஸ் (TVS) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் பிரபலமான இருசக்கர வாகன மாடல்களில் என்டார்க் 125 (Ntorq 125 XT)-ம் ஒன்று. இந்த ஸ்கூட்டரை பன்முக தேர்வில் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக ஆறு விதமான தேர்வுகளில் அது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரம், டிஸ்க், ரேஸ் எடிசன், சூப்பர் ஸ்குவாட் எடிசன், ரேஸ் எக்ஸ்பி மற்றும் எக்ஸ்டி ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில், எக்ஸ்டி எனும் தேர்வை மிக சமீபத்திலேயே டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. கடந்த மே
2 ஆம் தேதியே அது அறிமுகமான நாள். அறிமுக விலையாக ரூ. 1.03 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விலையையே டிவிஎஸ் நிறுவனம் தற்போது குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ. 1.03 லட்சத்தில் இருந்து ரூ. 97,061 ஆக அதன் விலை குறைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ரது. இதன்படி டிவிஎஸ் என்டார்க் 125 எக்ஸ்டி வேரியண்டின் விலை ரூ. 5 ஆயிரம் வரை குறைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த விலை குறைப்பு நடவடிக்கை வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. மேலும், இந்த விலை குறைப்பால் தற்போது டிவிஎஸ் என்டார்க்கின் எக்ஸ்டி மற்றும் ரேஸ் எக்ஸ்பி ஆகிய இரு தேர்வுகளும் நிகரான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகியிருக்கின்றது.

என்டார்க் எக்ஸ்டி வேரியண்ட் அதிக சிறப்பு வசதிகள் கொண்ட தேர்வாகும். எனவேதான் அது உயர்நிலை தேர்வாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. மிக முக்கியமான அம்சமாக எல்சிடி, டிஎஃப்டி இரு அம்சங்களையும் தாங்கிய திரை இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன், டிவிஎஸ் இன் ஸ்மார்ட்எக்ஸோன்னக்ட் இணைப்பு அம்சமும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. ப்ளூடுத் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் வாயிலாக இந்த இணைப்பு வசதியை உரிமையாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடன், ஸ்மார்ட்எக்ஸ்டால்க் எனும் அம்சத்தையும் ஸ்கூட்டரில் அது வழங்கியிருக்கின்றது.

இந்த அம்சம் வாய்ஸ் அசிஸ்டன்டாக செயல்பட உதவும். அதாவது, ஸ்கூட்டரின் மோட் மற்றும் திரையின் பிரைட்னஸ் ஆகியவற்றை குரல் கட்டளை வாயிலாக மாற்றிக் கொள்ள முடியும். இதுமட்டுமின்றி இந்த அம்சம் எரிபொருள் குறைவாக இருப்பதையும் எச்சரிக்கும். இத்துடன், எரிபொருள் வீணாவது, செல்போனின் பேட்டரி குறித்த எச்சரிக்கையை வழங்குதல் போன்றவற்றையும் அது மேற்கொள்ளும்.

மேலும், ஸ்மார்ட்எக்ஸ்டிராக் எனும் சிறப்பு அம்சத்தையும் என்டார்க் 125 எக்ஸ்டி தேர்வில் டிவிஎஸ் வழங்கியிருக்கின்றது. இந்த அம்சம் கிரிக்கெட் மற்றும் ஃபூட் பால் ஸ்கோர், சோசியல் மீடியா அப்டேட், செய்திகள், கால நிலை பற்றிய அறிவிப்புகள் ஆகியவற்றை வழங்கும். டிராஃபிக்கில் நீண்ட நேரம் நிற்கும்போது அந்த நேரத்தை சுவாரஷ்யமானதாக மாற்றிக் கொள்ள இந்த அம்சம் உதவியாக இருக்கும்.

இதுபோன்று இன்னும் பல சிறப்பு தொழில்நுட்ப வசதிகள் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. டிவிஎஸ் என்டார்க் ஓர் அதிக வேகத்தில் செல்லக் கூடிய 125 சிசி ஸ்கூட்டராகும். இந்த ஸ்கூட்டரில் 124.8 சிசி, 3 வால்வு ஏர் கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரில் சிறப்பு வசதியாக ரேஸ் ட்யூன்ட் ஃப்யூவல் இன்ஜெக்சம் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக இந்த எஞ்ஜின் 6.9 கிலோவாட் பவரை 7 ஆர்பிஎம்மிலும், 10.5 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட ஸ்கூட்டரின் எக்ஸ்டி வேரியண்டின் விலையையே டிவிஎஸ் குறைத்து அதிரடி காட்டியிருக்கின்றது. இந்த நடவடிக்கையால் மேலும் வாடிக்கையாளர்கள் பலர் இந்த ஸ்கூட்டரின் பக்கம் ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திடீர் விலை குறைப்பிற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.