க்ராஸ்ஓவர் கார்களுக்கு பல வெளிநாட்டு சந்தைகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் நமது இந்தியர்கள் தான் இத்தகைய உடலமைப்பை கொண்ட கார்களை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை என்று சொல்ல வேண்டும். இதற்கான காரணங்கள் என்ன? வாருங்கள் அவற்றை விரிவாக விவாதிப்போம்.

விலை உயர்வுகள்
க்ராஸ்ஓவர்களுக்கும், எஸ்யூவிகளுக்கும் பெரியளவில் வித்தியாசம் இருக்காது. என்றாலும், க்ராஸ்ஓவர்கள் சற்று தனித்து தெரியக்கூடியவை. உதாரணத்திற்கு, சமீபத்தில் சந்தையை விட்டு சென்ற மாருதி சுஸுகி எஸ்-கிராஸை சொல்லலாம். வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் க்ராஸ்ஓவர் கார்களின் விலைகளை அவ்வப்போது உயர்த்தி வருகின்றன.

ஆனால் இதற்கேற்ப வழங்கப்படும் அப்டேட்கள் என்று பார்த்தால், காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமே. ஒரு சில நிறுவனங்கள் ஆரம்பத்தில் இருந்து காரின் க்ரவுண்ட் க்ளியரென்ஸை கூட மாற்றாமல் விற்பனை செய்துவந்துள்ளன. விலை உயர்வுக்கு ஏற்ப க்ராஸ்ஓவர் கார்களில் போதுமான அப்டேட்கள் வழங்கப்படாதது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.

எஸ்-கிராஸை பொறுத்தவரையில், இது மாருதியின் விலைமிக்க காராக விளங்கிவந்தது. ஆனால் இதில் வழங்கப்பட்டுவந்த தொழிற்நுட்ப சிறப்பம்சங்களோ விலை குறைவான விட்டாரா பிரெஸ்ஸாவில் வழங்கப்படுபவையாக இருந்தன. பிரிவிலேயே முதல்முறையாக பல புதிய வசதிகளை எஸ்-கிராஸில் அறிமுகத்தின்போது மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தி இருந்தாலும், அவ்வப்போது காரின் விலை அதிகரிக்கப்பட்டதால் விற்பனையில் இருந்த 7 வருடங்களில் எஸ்-கிராஸ் வாடிக்கையாளர்களை கவர தவறவிட்டது.

போதிய இயந்திர பாக அப்டேட்கள் இல்லாமை
எடியோஸ் க்ராஸ், அவெண்டுரா, க்ராஸ் போலோ & டியாகோ என்ஆர்ஜி போன்ற முன்பு விற்பனையில் இருந்த க்ராஸ்ஓவர் கார்கள் அவற்றின் ஹேட்ச்பேக் வெர்சனில் இருந்து எந்தவொரு இயந்திர பாக அப்டேட்டையும் பெறாமல் அறிமுகமாகின. சற்று அளவில் சிறிய ஹேட்ச்பேக்கை க்ராஸ்ஓவராக மாற்ற வேண்டுமெனில், அதற்கேற்ப ஆற்றல்மிக்க என்ஜினை வழங்குவது அவசியமானது.

எஸ்யூவி கார்களில் புதிய புதிய ஆற்றல்மிக்க என்ஜின்களை வழங்க தயாராக உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் க்ராஸ்ஓவர்களில் அவ்வாறான என்ஜின் தேர்வுகளை சேர்க்க ஏனோ ஆரம்பத்தில் இருந்தே தயக்கம் காட்டி வருகின்றன. ஒருவேளை, உற்பத்தி செலவு அதிகரிக்குமோ என்கிற பயத்தினால் இருக்கலாம்.

ஆனால் இந்த குறையை வாடிக்கையாளர்கள் அறியா வண்ணம் பருத்த பிளாஸ்டிக் க்ளாடிங்குகளை க்ராஸ்ஓவர் கார்களின் பக்கவாட்டிலும், முன்பக்கத்திலும் வழங்கி ஈடுசெய்ய தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சித்தன. இந்த யுக்தி ஆரம்பத்தில் பலனளித்தது என்றாலும், சில காலத்திலேயே இதனை வாடிக்கையாளர்கள் அடையாளம் கண்டுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட இரசனை
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான தேவை கடந்த சில வருடங்களில் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதை கண்கூடாக பார்த்து வருகின்றோம். இருப்பினும் அதேநேரம் ஹேட்ச்பேக் கார்களை வாங்குவோரும் இப்போதும் அதிகமாகவே உள்ளனர். ஆனால் க்ராஸ்ஓவர்களை தேர்வு செய்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

அதாவது இந்திய வாடிக்கையாளர்கள் எஸ்யூவி கார்களையும், ஹேட்ச்பேக் கார்களையும் தனித்தனியாக பெறவே விரும்புகின்றனர். இவை இரண்டையும் கலந்து உருவாக்கப்பட்ட க்ராஸ்ஓவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எஸ்யூவி ஆர்வலர்கள் ஆற்றல்மிக்க என்ஜினை ஒரே டார்க்கெட்டாக வைத்து எஸ்யூவி கார்களின் பக்கம் செல்கின்றனர்.

ஹேட்ச்பேக் கார்கள் பிரியர்களுக்கு என்றே மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ் & ஹூண்டாய் ஐ20 என அசரடிக்கும் ஸ்டைலிலான ஹேட்ச்பேக் கார்கள் விற்பனையில் உள்ளன. இதனால் இவை இரண்டை தாண்டி மூன்றாவதாக ஒரு தேர்வுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு தற்போதைக்கு இல்லை. இதுவே இந்தியாவில் க்ராஸ்ஓவர் கார்களின் வீழ்ச்சிக்கு காரணம் எனலாம்.