கார் தயாரிப்பு நிறுவனங்களில் இந்தியாவைப் பொருத்தவரை பல ஆண்டுகளாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் நிறுவனம் மாருதி தான். இந்த நிறுவனத்தின் கார்களை மக்கள் அதிகமாக ரசிக்கத் துவங்கிவிட்டனர். குறைவான பட்ஜெட், ஏகப்பட்ட அம்சங்கள், அட்டகாசமான லுக் ஆகியன மாருதி நிறுவனத்தின் பிளஸ் பாயிண்டாடக உள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் விற்பனையான கார் நிலவரங்கள் குறித்த ரிப்போர்ட்டை தற்போது கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் வெளியிட்டு விட்டன. அதன்படி இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்த டாப் 5 நிறுவல்களைப் பற்றித் தான் காணப்போகிறோம்.

கியா – 5வது இடம்
பட்டியலில் 5வது இடத்தை கியா நிறுவனம் பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 18,718 பயணிகள் வாகனத்தை விற்பனை செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 11,050 வாகனங்கள் மட்டுமே விற்பனையான நிலையில் இந்த மாதம் 7,668 வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் 69.39 சதவீத விற்பனை அதிகமாகியுள்ளது. இந்த மாதத்தில் கியா நிறுவனம் 4.5 லட்சம் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது. அதில் கியா சோனட் கார் மட்டும் 1.5 லட்சம் விற்பனையைப் பெற்றுள்ளது.

கடந்த மே மாதம் கியா செல்டோஸ் கார் மொத்தம் 5,953 கார்களை விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் வெளியான கியா கேரன்ஸ் கார் மொத்தம் 4,612 கார்கள் விற்பனையாகியுள்ளது. பிரிமியம் எஸ்யூவி காரான கியா கார்னிவல் கார் மொத்தம் 239 கார்கள் விற்பனையாகியுள்ளது. இந்நிறுவனம் தற்போது இவி6 என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மே மாத விற்பனையில் 15இவி 6 வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டதும் சேர்க்கப்பட்டுள்ளது. கியா நிறுவனம் இந்த 2022ம் ஆண்டு மட்டும் மொத்தம் 97,796 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மஹிந்திரா – 4வது இடம்
இந்த பட்டியலில் 4வது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 26,904 வாகனங்களைக் கடந்த மே மாதம் விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 மே மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 236 சதவீதம் அதிகம் ஆகும். கடந்தாண்டு மே மாதம் வெறும் 8.004 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்நிறுவனத்தைப் பொருத்தவரை போலிரோ கார்களின் விற்பனை தான் அதிகமாக இருக்கிறது. அதே போல எக்ஸ்யூவி 700 மற்றும் 4ம் தலைமுறை ஸ்காப்பியோ காருக்கான டிமாண்ட்களும் அதிகமாக இருந்தது.

இந்நிறுவனம் தற்போது ஸ்கார்ப்பியோ காரின் புதிய தலைமுறை வெர்ஷனாக ஸ்கோபியோ – என் என்ற காரை இந்த மாதம் 27ம் ததி அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே விற்பனையாகும் ஸ்காப்பியோ காருடன் இந்த காரும் சேர்ந்து விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி வளர்ந்து மேல் நோக்கியே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் -3வது இடம்
ஹூண்டாய் நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 42,293 கார்களை விற்பனை செய்து 3வது இடத்தில் இருக்கிறது. இது கடந்தாண்டு மே மாத விற்பனையைக் காட்டிலும் 69.2 சதவீத வளர்ச்சியாகும். கடந்தாண்டு மே மாதம் வெறும் 25,001 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் 10 மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. கிராண்ட் ஐ10, ஐ20 ஆகிய ஹேட்ச் பேக் கார்கள், வெர்னோ என்ற செடான் கார், வென்யூ என்ற காம்பேக்ட் எஸ்யூவி, க்ரெட்டா, அலகாஸர், டக்சன் என்ற எஸ்யூவி கார்கள், கோனா என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவிகள் கார்களை விற்பனை செய்து வருகிறது.

வழக்கமாக இந்நிறுவனம் டாப் பட்டியலில் இந்தியாவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் 2வது பெரிய நிறுவனமாக இருக்கும். ஆனால் இந்தாண்டு அந்நிறுவனம் பெரும் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு முக்கியமாக 2-3 காரணங்கள் சொல்லப்படுகிறது. முக்கியமாகப் பராமரிப்பு காரணமாக இதன் தயாரிப்பு ஆலை கடந்த மே மாதம் 6 நாட்கள் மூடப்பட்டது தான் முக்கியமான காரணமாகச் செல்லப்படுகிறது. இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கார்களுக்கான டிமாண்ட்களில் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் – 2வது இடம்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 74,755 வாகனங்களை விற்பனை செய்து பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. இது கடந்தாண்டு மே மாத விற்பனையை ஒப்பிடும் போது 204 சதவீதம் ஆகும். கடந்தாண்டு மே மாதம் வெறும் 24,455 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் விற்பனையான ஒட்டுமொத்த வாகனங்களில் பயணிகள் வாகனம் மட்டும் 43,341 ஆகும். இது எலெக்ட்ரிக் மற்றும் கம்பஷன் வாகனங்களின் கூட்டு விற்பனை எண்ணிக்கை ஆகும்.

இதில் கம்பஷன் இன்ஜின் வாகனங்களைப் பொருத்தவரை மொத்தம் 39,887 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. ஹாரியர், சஃபாரி, மற்றும் டியாகோ ஆகிய வாகனங்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. 3,454 எலெக்ட்ரிக் வாகனங்களும் விற்பனையாகியுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரை 626 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்தாண்டு மே மாதம் வெறும் 476 எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. டிகோர் இவி, நெக்ஸான் இவி ஆகிய வாகனங்கள் எலெக்ரிக் கேட்டகிரியில் விற்பனையாகியிருந்தது. தற்போது டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் காரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் கடந்த 6 மாதத்தில் இரண்டாவது முறையாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

மாருதி சுஸூகி – முதலிடம்
இந்த பட்டியலில் வழக்கம் போல மாருதி சுஸூகி நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 1,24,474 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த 2021 மே மாத விற்பனையை ஒப்பிடும் போது 278.31 சதவீதம் அதிகம். அப்பொழுது வெறும் 32,903 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த மே மாத விற்பனையில் 17,408 கார்கள் மினி செக்மெண்டில் விற்பனையாகியுள்ளது. இந்த செக்மெண்டில் ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸொ ஆகிய கார்கள் இருக்கிறது.

அடுத்ததாக காம்பேக்ட் செக்மெண்டில் மொத்தம் 67,947 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னீஷ், ஸ்விஃப்ட், டூர்-எஸ் மற்றும் வேகன் ஆர் ஆகிய கார்கள் இருக்கிறது. மிட் சைஸ் செடான் செக்மெண்டில் ஒரே ஒரு கார் தான் இருக்கிறது. சியாஸ் கார் இது 586 கார்கள் விற்பனையாகியுள்ளது. அடுத்ததாக யூட்டிலிட்டி வாகனங்களைப் பொருத்தவரை மொத்தம் 38.553 வவாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த செக்மெண்டில் எர்டிகா, விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோ ஆகிய கார்கள் இருக்கிறது.