தொடக்க வர்த்தகத்தில் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்தது- தினமணி


புதுதில்லி: கடந்த நான்கு வர்த்தக நாட்களாக சரிவில் இருந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை நேர்மறையாக முடிந்தது. குறிப்பாக ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 428 புள்ளிகள் உயர்ந்தது.

சர்வதேசம்: வரவிருக்கும் உலகளாவிய மத்திய வங்கிக் கூட்டங்களின் தாக்கத்தை முதலீட்டாளர்கள் எடைபோடுவதன் மூலம், சந்தையில் தொடர்ந்து நிலையற்ற தன்மை இருந்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க சந்தையில் வர்த்தகம் நேர்மறையாக இருந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு சந்தை பிரகடனத்தில் ஏற்றம் கண்டு நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக, ஐடி, பார்மா, வங்கிப் பங்குகள் விலை உயர்ந்தது சந்தை ஏற்றம் பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவன அதிகாரி வினோத் நாயர் கூறினார், “அமெரிக்க வங்கியான ஃபெடரல், கொள்கை முடிவுகள் அறிவிப்பை எதிர்நோக்கி, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார்.

1,707 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,438 நிறுவனப் பங்குகளில் 1,707 பங்குகள் ஆதாரப் பட்டியலில் இருந்தன. 1,612 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலுக்கு வந்தன. 119 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 73 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 72 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.44 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.254.95 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10.75 கோடியைக் கடந்தது.

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி: காலையில் 378.32 புள்ளிகள் குறைந்து 54,514.17-இல் தொடங்கிய சென்செக்ஸ் 54,507.41 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 55,366.84 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 427.79 புள்ளிகள் (0.78%) கூடுதலுடன் 55,320.28-இல் நிலைபெற்றது. முன்பேர வர்த்தகத்தில் வாரந்திர ஒப்பந்த கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததால் சந்தையில் நாள் முழுவதும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

டாக்டர் ரெட்டீஸ் லேப் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 21 பங்குகள் ஆதாரப் பட்டியலில் வந்தன. இதில், பிரபல மருந்து உற்பத்தி நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் லேப் 3 சதவீதம், ரிலையன்ஸ் 2.73 சதவீதம் உயர்ந்து ஆதார் பட்டியலில் முன்னிலை வகித்தது. இவற்றுக்கு அடுத்ததாக, பார்தி ஏர்டெல், சன்பார்மா, டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஐடிசி உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், டிசிஎஸ், மாருதி சுசூகி உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயர்ந்த பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: அதே சமயம், கடந்த இரண்டு தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த டாடா ஸ்டீல் 3.81 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது.

மேலும், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, ஈஷியன் பெயிண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் 0.70 முதல் 1.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 993 பங்குகள் ஆதாயம் பெற்றன. 920 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 38 பங்குகள் ஆதாரப் பட்டியலிலும், 12 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இடம்பெற்றன. காலையில் 92.40 புள்ளிகள் குறைந்து 16,263.85-இல் தொடங்கிய நிஃப்டி 16,243.85 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 16,492.80 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 121.85 புள்ளிகள் (0.74 சதவீதம்) உயர்ந்து 16,478.10-இல் நிலைபெற்றது.

ஆயில் அண்ட் காஸ் குறியீடு 2% உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு (1.31%), பிஎஸ்யு பேங்க் (0.31%) குறியீடுகள் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாரப் பட்டியலில் வந்தன. இதில் ஆயில் ஆண்ட் காஸ் 1.96% உயர்ந்து ஏற்றப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பார்மா, ஹெல்த்கேர் குறியீடுகள் 1.30% வரை உயர்ந்தன.

ரூ.720-ஆக சரிந்த எல்ஐசி: மும்பை, தேசிய பங்குச் சந்தையில் அண்மையில் பட்டியலான எல்ஐசி பங்குகள் விலை வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. தேசிய பங்குச் சந்தையில் காலையில் ரூ.729.90-இல் தொடங்கிய எல்ஐசி, அதிகபட்சமாக ரூ.736 வரை உயர்ந்தது. பின்னர், வர்த்தக முடிவில் ரூ.720.10 வரை கீழே சென்று புதிய குறைந்தபட்ச விலையைப் பதிவு செய்தது. இறுதியில் 2.23 சதவீதம் சரிவடைந்து ரூ.721.60-இல் நிலைபெற்றது. இதே போன்று, மும்பை பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தக முடிவில் 2.17 சதவீதத்தை இழந்து ரூ.721.95-இல் நிலைபெற்றது.

Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube