உண்மையில், அரசியல் களம் என்று வந்துவிட்டால் அதில் அவர் எந்த அளவுக்கு உயரத்தை எட்டியிருக்கிறார் என்பதுதான் முக்கியம். அந்தக் கோணத்தில் பார்த்தால் பொன்னையன் அடைந்த உயரம் மிகப்பெரியது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் சி. பொன்னையன், அதிமுகவின் ஆரம்பகாலத் தொண்டர். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவர். எம்.ஜி.ஆர், ஜானகி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற மூன்று முதல்வர்களின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்.
அதிமுக சந்தித்த முதல் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, இளம் உறுப்பினராக வந்த பொன்னையனை முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துத்துறைக்கு அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.
1980 தேர்தலில் மீண்டும் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட பொன்னையன், தன்னை எதிர்த்து இந்திரா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பியான காளியண்ண கவுண்டர் என்கிற செல்வாக்கு நிரம்பிய தலைவரை சுமார் பதினேழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கான பரிசாக பொன்னையனை சட்டத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தபோது, ஜானகி எம்ஜிஆரின் பக்கம் நின்றார் பொன்னையன். குறுகில காலமே இருந்த ஜானகி எம்ஜிஆர் அமைச்சரவையிலும் பொன்னையன் இடம்பெற்றிருந்தார்.
Also Read: ’பாஜக வளருகிறது, பொன்னையன் வளரவில்லை’.. அந்த ஆதங்கத்தில் அவர் பேசியிருப்பார்… ஹெச்.ராஜா
எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு சிலகாலம் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த பொன்னையனை 2001ல் மீண்டும் அரசியல் களத்துக்கு அழைத்துவந்த ஜெயலலிதா, அவரை திருச்செங்கோட்டில் நிறுத்தி வெற்றிபெறச் செய்தார்.
ஜானகி எம்ஜிஆரின் ஆதரவாளராக அறியப்பட்ட பொன்னையனுக்குத் தனது அமைச்சரவையில் முக்கியத் துறையான நிதித்துறையை ஒதுக்கினார் ஜெயலலிதா. ஆட்சி நிர்வாகத்தில் மட்டுமின்றி, கட்சி நிர்வாகத்திலும் அவைத்தலைவர் உள்ளிட்ட முக்கியமான பொறுப்புகளைப் பொன்னையனுக்குக் கொடுத்தார் ஜெயலலிதா. அதற்குக் காரணம் பொன்னையனின் அனுபவமும் திறமையும்.
வழக்கறிஞர். அதிமுகவின் வரலாறு தெரிந்தவர். இந்திய, தமிழக அரசியலில் ஆழ அகலம் புரிந்தவர். எம்.எல்.ஏ தொடங்கி அமைச்சர் வரை பல பொறுப்புகளை வகித்தவர். அதிமுகவின் அடிப்படைத் தொண்டராக இருந்து அவைத்தலைவர் அளவுக்கு உயர்ந்தவர். பழுத்த அனுபவசாலி. மூன்று முதலமைச்சர்களின் நம்பிக்கையைப் பெற்றவர். தற்போது அதிமுகவின் அமைப்புச் செயலாளர். இதுதான் சி.பொன்னையன் என்கிற அரசியல் ஆளுமையின் உண்மையான உயரம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.