தூத்துக்குடி: தூத்துக்குடி கோளரங்கம் நேற்றுமுதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சிறுவர்களுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வஉசி கல்லூரி அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.57.10 கோடி மதிப்பீட்டில் மானுடவியல் பூங்கா, ஐந்திணை பூங்கா, கோளரங்கம், போக்குவரத்து பூங்கா ஆகியவைஒரே பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
கோளரங்கத்தை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் இலவசமாக பார்வையிட கடந்த ஒரு மாதமாக அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
நேற்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 4-டி காணொலி, 5.1 ஆடியோ சிஸ்டம் மற்றும் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கோளரங்கத்தில், விண்வெளி தொடர்பாக தினமும் காலை 10.30, பகல் 12, பிற்பகல் 3 மற்றும் மாலை 5 மணி ஆகிய 4 காட்சிகள் திரையிடப்படுகின்றன. ஒரு நேரத்தில் 48 பேர் அமர்ந்து காட்சியை பார்வையிட முடியும்.
கோளரங்கத்தை பார்வையிட பள்ளி மாணவர்கள் மற்றும்சிறுவர்களுக்கு ரூ.15, பெரியவர்களுக்கு ரூ.30 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பணியாளர்களே இந்தகட்டணத்தை வசூல் செய்கின்றனர். முதல் நாளிலேயே பல்வேறுபள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் கோளரங்கத்தை பார்வையிட்டனர்.