பறவைகளை ரசனையோடு பார்ப்பவர்கள் பலர் இருந்தாலும் கூட மனிதாபிமானத்துடன் அதற்கு உணவளித்து ரசிப்பவர்கள் சிலரே. அதற்கு உதாரணமாக திகழ்பவரே நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தெற்கு வீதியைச் சேர்ந்த தேவிபாலு என்கிற பாலசுப்பிரமணியன்(60). தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித எதிர்பார்ப்புமின்றி காகம், குயில், குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு இரை அளித்து வரும் நிகழ்வு பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இறந்துவிட்ட தம் முன்னோரின் பிரதிநிதியாகவே காகத்தைக் கருதி பலரும் காகத்திற்கு மட்டுமே உணவு அளிப்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இந்நிலையில் காகத்தையும் தனது குடும்ப உறுப்பினராக நினைத்து தினமும் ஏராளமான காக்கை இனங்களுக்கு உணவு அளிப்பதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். காலை 5.30 மணிக்கே சுமார் 300 முதல் 500க்கும் மேற்பட்ட காகங்கள் இவரது வீட்டிற்கு முன் குவிவதை வழக்கமாக கொண்டுள்ளன.
தினமும், இவர் இரையை துாவ அவரை சுற்றி பறவைகள் வட்டமிடுதல் கண்கொள்ளா காட்சியாக அமைகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் காக்கைக்கு உணவளிக்க பிரத்தியேகமாக வீட்டிலேயே இரையை தயார் செய்து காக்கைகளின் பசியை ஆற்றியுள்ளார். அவரோடு அவரது மனைவி ஜமுனா ராணி மற்றும் பட்டதாரியான மகன் முகில் அரசன் என மூவரும் ஒன்றிணைந்து இந்தச் செயலை எந்தவித தொய்வுமின்றி இன்றளவும் செய்து வருகின்றனர்.
மனித இனங்களுக்கு உணவு அளிக்க தயங்குவோர் மத்தியில் பறவை இனங்களில் ஒன்றான காக்கை கூட்டத்தையே கூட்டி தினம்தோறும் பசியாற செய்யும் இவரது செயல் சிறந்த கொடை வள்ளல் பண்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
செய்தியாளர் : பாலமுத்துமணி
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.