விக்ரம் (1986) | சுஜாதாவின் ஸ்டைல், ராஜாவின் மிரட்டல், கமலின் சாகசம் – ஒரு ரீவைண்ட் பார்வை | விக்ரம் 1986 திரைப்பட விமர்சனம்


கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ (2022) படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டது. அடுத்த சில மணி நேரங்களில் படம் குறித்த கமெண்ட்களால் சமூக வலைதளம் வைரலாகப் போகிறது. அத்தகைய சூழலில் ‘விக்ரம்’ (1986) படம் குறித்து சற்றே விரிவாக நினைவுகூர்ந்து பார்ப்போம்.

காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றினால் சரியாக 36 ஆண்டுகளுக்கு முன்பு ‘விக்ரம்’ படம் வெளியாகி இருந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி, வெளிவந்த படம்.

கமல்ஹாசன், சத்யராஜ், அம்ஜத்கான், அம்பிகா, லிஸ்ஸி, டிம்பிள் கபாடியா, மனோரமா, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, சாருஹாசன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் நடித்திருந்தனர். அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தில் வாழ்ந்தனர் என்றே சொல்லலாம்.

படத்தின் கதையை எழுத்தாளர் சுஜாதா எழுதி இருந்தார். திரைக்கதையை கமல்ஹாசனும், சுஜாதாவும் இணைந்து எழுதி இருந்தனர். ராஜசேகர் இயக்கி இருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வெள்ளி விழா கண்ட படம் இது. சுமார் ஒரு கோடி ரூபாயில் உருவான முதல் தமிழ்ப் படம் இது எனவும் சொல்லப்படுகிறது. விஞ்ஞான புனைக்கதை ஜானர் என இந்தக் கதையின் கருவை சொல்லலாம். கமர்ஷியல் ரீதியாக நல்ல வசூலையும் ஈட்டி இருந்தது ‘விக்ரம்’.

சுஜாதா சொல்லியுள்ள கதை என்ன?

1980-களில் தமிழ் சினிமா கதாநாயகர்கள் மதராசப்பட்டினம் நோக்கி படையெடுப்பதே கதைக் களமாக இருந்தது. பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற இயக்குநர்கள் அதை கொஞ்சம் மாற்றி அமைத்துக் கொண்டிருந்த காலம் எனவும் அதனைச் சொல்லலாம். அப்படிப்பட்ட ஒரு நபர் தான் ‘விக்ரம்’ வெளியாகி இருந்தது.

தேச விரோதிகளால் கடத்தப்பட்ட அக்னிபுத்ரன் II ராக்கெட்டை ஒப்படைக்க வேண்டுமெனில் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும். இல்லை என்றால் அந்த ராக்கெட்டை (ஏவுகணை) வெடிக்கச் செய்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என இந்தியாவுக்கு மிரட்டல் வருகிறது. முப்படைகளும் இந்தச் செய்தியை அறிந்து அதிர்ச்சி கொள்கிறது. காரணம் ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் தன்மை கொண்டது என சொல்லப்படுகிறது. சுமார் ஆயிரம் மைல் தூரம் கடந்து செல்லும் தன்மை கொண்டது எனவும் சொல்லப்படுகிறது.

முக்கியமாக, இந்த ராக்கெட் பத்து நாட்களில் தானாகவே வெடிக்கும் தன்மையில் குறிப்பிடப்படுகிறது. சக்தி வாய்ந்த இந்த ராக்கெட்டை கண்டுபிடிக்கும் பணியில் ரா (RAW) புலனாய்வு துறையை சேர்ந்த அதிகாரி அருண் குமார் விக்ரம் நியமிக்கப்படுகிறார். அவர்தான் நடிகர் கமல்ஹாசன். தனது பணியை விக்ரம் செய்தாரா? ராக்கெட்டை மீட்டாரா? பேராபத்தை தடுத்தாரா? – இதுதான் கதை. சுஜாதாவின் எழுத்தில் புலனாய்வுக் கதை என்றால் அது படிக்கவே அலாதி பிரியமாக இருக்கும். அதற்கு சிறந்த ஓர் உதாரணம் ‘காயத்ரி’. ‘விக்ரம்’ கதையிலும் தனது பாணியை கையாண்டிருப்பார் சுஜாதா.

16540835373068

விக்ரமும் புதுமையும்: தமிழ் சினிமாவில் கம்யூட்டரை காட்சிப்படுத்திய முதல் வரிசை தமிழ்த் திரைப்படங்களில் ‘விக்ரம்’ ஒன்று என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் வொர்க் ஸ்டேஷன் கணினியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதேபோல விக்ரம் மற்றும் சுகிர்தராஜா (சத்யராஜ்) குறித்த அறிமுகம் கான்ட்ரா வகையில் ஒருவருக்கு ஒருவர் ஸ்லைட் ஷோ மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பாகுபலி-1 படத்தில் வரும் ‘கிளுக்கி’ கற்பனை மொழியை போல கற்பனை நாடான சலாமியா நாட்டில் பேசும் மொழி ஒன்று ‘விக்ரம்’ படத்தில் பேசப்பட்டிருக்கும். இந்த மொழியை உருவாக்கியது கமல்ஹாசன் என பின்னாளில் தெரிவிக்கப்பட்டது.

துபாஷாக வரும் நடிகர் ஜனகராஜின் கதாபாத்திரம், சுல்தானாக வரும் அம்ஜத்கான் பாத்திரம், சலாமியா காவலர்களின் முகமூடி மற்றும் உடை, விக்ரமை தண்டனை கொடுத்து கழுவில் ஏற்றும் காட்சி, ஒட்டக சேஸிங் காட்சி, படத்தின் தொடக்கத்தில் வரைபடம் மூலமாக தொடங்கும் நீதிமன்ற காட்சி, டைட்டில் சாங் போன்றவை மிகவும் கவனம் ஈர்த்திருக்கும். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் முழுவதும் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் நிறைந்த காட்சிகள் இருக்கும். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன.

இளையராஜாவின் இசை: ‘விக்ரம்’ படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள். வைரமுத்து, வாலி மற்றும் கங்கை அமரன் கைவண்ணத்தில் உருவானவை. ஒவ்வொரு பாடலும் ஒரு ரகம். பாடல்களைத் தவிர பின்னணி இசையும் பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கும். தனித்துவமான இசை கோர்வை காட்சிகளுக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கும். அது இளையராஜாவுக்கே உரிய ஸ்டைல்.

16540835533068

திரைக்கதை, நடிப்பு, பாடல், தயாரிப்பு என சகலத்திலும் வல்லவனாக ஜொலித்திருப்பார் விக்ரமாக வரும் கமல்ஹாசன். கமர்ஷியல் படங்களுக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அம்பிகா உயிரிழக்கும் காட்சியில் அப்படியே நடிப்பை கொட்டித் தீர்த்திருப்பார். மனைவியின் இழப்பு, பழிவாங்கும் உணர்வு, கோவம், பணியில் காட்டும் கடுமை என முகபாவனைகளில் அசத்தி இருப்பார்.

இப்போது மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில், அவரது தயாரிப்பில் மீண்டும் ஒரு ‘விக்ரம்’ வெளியாகவுள்ளது. இந்த முறை புதியக் குழுவுடன் களம் இறங்கியுள்ளார். பழைய விக்ரமை போலவே புதிய ‘விக்ரம்’ படமும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆக்ஷன் காட்சிகள் பழைய படத்தைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும் என்பது தெளிவு.





Source link

Please follow and like us:
icon Follow en US
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube