உயிர்பலி வாங்கி வரும் இரணியல் நெடுஞ்சாலை: தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?


திங்கள்சந்தை: குமரி மாவட்ட நெடுஞ்சாலைகளில் பார்வதிபுரம் தேசிய நெடுஞ்சாலை முக்கிய நெடுஞ்சாலையாக உள்ளது. நாகர்கோவில் பார்வதிபுரம் வழியாக  செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருந்து  புதுக்கடை செல்லும் முக்கிய மாநில நெடுஞ்சாலை தோட்டியோட்டில் இருந்து பிரிந்து செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை, கருங்கல், குளச்சல் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், அரசு பேருந்துகள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த மாநில நெடுஞ்சாலை வழியாகவே சென்று வருகின்றன.

எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும் இந்த நெடுஞ்சாலையில் தற்போது அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  கடந்த சில நாட்களில் மட்டும்  3 பேர் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். கடந்த 16ம் தேதி மாலை ஸ்கூட்டரில் சென்ற பரசேரியை சேர்ந்த இளம்பெண் தர்ஷினி (31) நுள்ளிவிளையில் லாரி மோதி சம்பவ இடத்தில் தலை நசுங்கி பலியானார். 29ம் தேதி இரவு கிருஷ்ணன் (61) என்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உடல் சிதைந்து சம்பவ இடத்திலே இறந்தார்.

அதேபோன்று 2ம் தேதி இரவு பைக்கில் வந்த வாலிபர் அஸ்வின் ஸ்டெபின் (24) அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். வாலிபர் மீது மோதிய அதே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நடந்து சென்ற தொழிலாளி தாணுதாஸ் (39) படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தோட்டியோடு – புதுக்கடை நெடுஞ்சாலையில் சமீபத்தில் அதிகரித்து வரும் விபத்துகளுக்கு காரணம் பராமரிப்பின்றி கிடக்கும் நெடுஞ்சாலைதான் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

சில ஆண்டுகளுக்கு முன்பே இரணியலில் இருந்து பரசேரிவரை குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை இதுவரை தார் போடப்படாமலேயே கிடக்கிறது.  சாலையில் கால் பகுதி தோண்டப்பட்டு மண் ரோடாக கிடக்கும் நிலையில், முக்கால் பகுதி மட்டுமே தார்சாலையாக உள்ளது. குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்டு சுருங்கி கிடக்கும் இந்த நெடுஞ்சாலையில் பகல் வேளைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஓரளவு ரோட்டை கணித்து சென்று விடுகின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்
இரவு நேரங்களில்  இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென குறுகி கிடக்கும் மண் சாலையால் திக்குமுக்காடி போகின்றனர். இதனால் தார்சாலைக்கு வரும் போது முக்கால் பகுதி ரோட்டில் இருபுறமும் உள்ள வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால்  வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. வாகன போக்குவரத்துக்கு ஏற்ப சாலைகளை விரிவுபடுத்துவது  அவசியம்.

ஆனால் திங்கள்சந்தையில் இருந்து தோட்டியோடுவரை செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலை முக்கால் அளவில் சுருங்கி கிடக்கிறது.  தொடர் விபத்துகள் நடந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டும் நெடுஞ்சாலையில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு குறைந்த பட்சம் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பகுதியிலாவது தார்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது, மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.Source link

Please follow and like us:
Pin Share

Leave a Reply

Your email address will not be published.

Follow by Email
Twitter
Visit Us
Follow Me
YouTube
YouTube